பாவம் அவரு… ரொம்ப விரக்தியில் இருக்காரு; அம்பத்தி ராயூடு குறித்து பேசிய ஸ்டீபன் பிளமிங் !!

சென்னை அணியின் சீனியர் வீரரான அம்பத்தி ராயூடு, ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு திடீரென ட்வீட்டை டெலிட் செய்தது குறித்தான தனது கருத்தை சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் ஓபனாக தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டரை பலப்படுத்தி வந்த அம்பத்தி ராயூடு, நடப்பு ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. அம்பத்தி ராயூடு, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் பலரின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் சென்னை அணி நடப்பு தொடரில் பல தோல்விகளை சந்தித்து, ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது.

இந்த வருட ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் அணியில் எடுக்கப்பட்ட அம்பத்தி ராயூடு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடப்பு ஐபிஎல் தொடருடன், ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்தார். அம்பத்தி ராயூடுவின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக்கான நிலையில், அம்பத்தி ராயூடு திடீரென தனது ட்வீட்டை டெலிட் செய்தார். அம்பத்தி ராயூடு ஓய்வு பெறவில்லை, சென்னை அணியுடன் தான் உள்ளார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் அறிவித்திருந்தார். ஆனால், குஜராத் அணிக்கு எதிரான சென்னை அணியின் கடந்த போட்டியில் அம்பத்தி ராயூடுவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், அம்பத்தி ராயூடுவின் இந்த ஓய்வு விவகாரம் குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங், அம்பத்தி ராயூடு வருத்தத்தில் இருந்ததாக தெரிவித்தார்.

இது குறித்து பிளமிங் பேசுகையில், “ராயுடு கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக மன உளைச்சலில் இருந்தார். இப்போது அவர் சரியாகிவிட்டார். அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.