சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வருட தொடரின் துவக்கமே மிக மோசமாக அமைந்துள்ளது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலுமே படுதோல்வியையே சந்தித்துள்ளது.
மூன்று தொடர் தோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாளை (9-4-22) நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தநிலையில் இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தோல்வியில் இருந்து உடனடியாக மீள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சென்னை அணிக்கு எதிர்வரும் அனைத்து போட்டிகளுமே சவாலாக இருக்கும் என்பதால் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்தே சென்னை அணி தனது வெற்றி கணக்கை துவங்க வேண்டும்.
இந்த போட்டிக்கான சென்னை அணியின் துவக்க வீரர்களாக வழக்கம் போல் உத்தப்பா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட்டே களமிறங்குவார்கள். மூன்று போட்டியிலும் மிக மோசமாக விக்கெட்டை இழந்த கெய்க்வாட் இந்த போட்டியிலாவது தனது பழைய ஆட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மிடில் ஆர்டரிலும் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. வழக்கம் போல் மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, சிவம் துபே ஆகியோரே களமிறங்குவார்கள்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோரும், பந்துவீச்சாளர்களாக கிரிஸ் ஜோர்டர் மற்றும் டூவைன் ப்ரெடோரியஸ் ஆகியோருமே களமிறங்குவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. 11வது வீரராக கடந்த போட்டியில் அதிகமான ரன்களை வாரி வழங்கிய முகேஷ் சவுத்ரி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, டூவைன் பிராவோ, டூவைன் ப்ரெடோரியஸ், கிரிஸ் ஜோர்டன், ராஜவர்தன் ஹங்ரேக்கர்.