யாரு சாமி நீ.. சூப்பர் ஓவரில் 30 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து.. வெஸ்ட் இண்டீஸை மிரட்டிய ஒரே நெதர்லாந்து வீரர்… 374 ரன்களை அடித்தும் சூப்பர் ஓவர்.. உலகக்கோப்பை குவாலிபயர் ஆட்டத்தில் அபூர்வம்!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து இரு அணிகளும் 374 ரன்கள் அடித்ததால் போட்டியில் சூப்பர் ஓவர் நடந்தது. இதில் நெதர்லாந்து வீரர் பேட்டிங்கில் 30 ரன்கள் அடித்துக் கொடுத்து, பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்துக் கொடுத்து நெதர்லாந்தை ஒத்தையாளாக வெற்றிபெற செய்திருக்கிறார். இந்த அதிசயம் உலகக்கோப்பை குவாலிபயரில் நிகழ்ந்துள்ளது.

உலகக்கோப்பை குவாலிபயர் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து இரு அணிகளும் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பவுலிங் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் துவக்க வீரர் பிரண்டன் கிங் 76 ரன்கள், சார்லஸ் 54 ரன்கள், சாய் ஹோப் 47 ரன்கள் அடித்து அவுட்டாகினர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகச்சிறந்த துவக்கம் கொடுத்தனர். அடுத்து உள்ளே வந்த நிக்கோலஸ் பூரன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் மற்றும் கீழ் வரிசையில் களமிறங்கிய கிமோ பால் 46 ரன்கள் அடித்துக்கொடுக்க 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இவ்வளவு பெரிய ஸ்கோரை இதுவரை எட்டிராத நெதர்லாந்து அணிக்கு துவக்க வீரர்கள் விக்ரம்ஜித்சிங் 37 ரன்கள், மேக்ஸ் 36 ரன்கள், வெஸ்லி 27 ரன்கள் மற்றும் லீடே 33 ரன்கள் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆங்காங்கே நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தபின் வெளியேறினர்.

அடுத்து உள்ளே வந்த தேஜா மற்றும் எட்வார்ட்ஸ் இருவரும் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் எட்வார்ட்ஸ் 67 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி வரை போராடிய தேஜா 111 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இருவரையும் தூக்கியப்பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கை பிறந்தது. இருப்பினும் அடுத்து வந்த நெதர்லாந்து வீரர்கள் லோகன் வேன் பீக் 14 பந்துகளில் 28 ரன்கள், ஆர்யன் 9 பந்துகளில் 16 ரன்கள் அடித்ததால், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு நெதர்லாந்து அணியும் 374 ரன்கள் எட்டியது.

இரு அணிகளின் ஸ்கோர் சமனில் முடிந்ததால் போட்டியில் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. இதில் நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. லோகன் வேன் பீக் பேட்டிங் செய்தார். இவர் ஜேசன் ஹோல்டர் வீசிய சூப்பர் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடித்து 30 ரன்கள் எட்டுவதற்கு உதவினார்.

6 பந்துகளில் 31 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய நிலைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தள்ளப்பட்டது. சூப்பர் ஓவரில் 30 ரன்கள் அடித்த வேன் பீக், சூப்பர் ஓவரில் பவுலிங்கும் செய்தார். இவர் முதல் மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் விட்டுக் கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வரிசையாக எடுத்துக் கொடுத்து நெதர்லாந்து அணியை வெற்றிபெற செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை குவாலிஃபயரில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது நெதர்லாந்து. அத்துடன் போனஸ் ஆக இரண்டு புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.

Mohamed:

This website uses cookies.