இந்தியா என்னோட விக்கெட் எடுக்கணும்னா, இதை செஞ்சா மட்டும் தான் நடக்கும்; 3ம் நாள் முடிவில் தனது தந்தையிடம் பேசிய டீன் எல்கர்!! தந்தை நெகிழ்ச்சி பேட்டி

2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் டீன் எல்கர் தன்னிடம் தொலைபேசியில் என்ன பேசினார் என்பதை அவரது தந்தை ரிச்சர்ட் எல்கர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடிய 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 240 ரன்கள் இலக்கை 4-ஆம் நாள் முடிவில் எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மற்றும் துவக்க வீரர் டீன் எல்கர் தான். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. 

களத்தில் இருந்த கேப்டன் டீன் எல்கர் நங்கூரம் போல் நின்று, 46 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நான்காம் நாள் ஆட்டத்தின் போது தென் ஆப்பிரிக்க அணிக்கு 122 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மீதம் 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, ஒரு முனையில் எல்கர் நிலைத்து ஆடி வந்தார். மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த டசன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பவுமா பார்ட்னர்ஷிப் அமைக்க தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டீன் எல்கர் 96 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை பூர்த்தி செய்து கொடுத்தார். இதற்கிடையில் மூன்றாம் நாள் முடிந்த பிறகு, டீன் எல்கர் தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்போது அவர் தன்னிடம் என்ன கூறினார் என்பதை அவரது தந்தையார் அனைவருக்கும் சமீபத்திய பேட்டியில் தெரியப்படுத்தியுள்ளார்.

“இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் என்னை விக்கெட் எடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் என் உடலில் உள்ள ஏதேனும் ஒரு பகுதியை உடைத்து தான் வெளியில் அனுப்ப வேண்டும். அதுவரை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் வெற்றி பெறும் வரை நான் நிலைத்து விளையாடப் போகிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், “வெற்றி பெறக்கூடிய இலக்கு 100 ரன்களுக்கும் குறைவாக இருந்தபோது நான் என் மனைவியிடம், ‘இனி பார்க்கப் போகிறாய். எல்கர் நிச்சயம் விக்கெட் கொடுக்க மாட்டான். இறுதிவரை நின்று விளையாடி கொடுப்பான்.’ என கூறினேன். அதே போல் அவனும் நின்று விளையாடினான். எனக்கு பெருமிதமாக இருக்கிறது.” என்றார்.

 

Prabhu Soundar:

This website uses cookies.