சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. ரோகித், விராட் கோலி எல்லாம் இந்தியாவில் புலி, வெளிநாட்டில் எலி – வெளுத்துவாங்கிய சுனில் கவாஸ்கர்!

வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி படுமோசமாக செயல்பட்டு வருவதற்கு காரணம் இந்திய பேட்ஸ்மேன்கள் தான் என்று கடுமையாக சாடியுள்ளார் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பைனலில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அடக்கி எளிதாக கோப்பையை வெல்லும் என்று பலரும் கணித்தனர். ஆனால் இந்திய அணி இருக்கும் ஃபார்மிற்கு கண்டிப்பாக ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிடுவார்கள் என்று மற்றொரு பக்கம் கருத்துக்களும் வெளிவந்தன.

கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை சென்று கோப்பையை வெல்லாமல் வெளியேறியுள்ளது.

இம்முறை கேப்டன் பொறுப்பில் விளையாடிய ரோகித் சர்மாவின் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவர் டாஸ் வென்று முடிவெடுத்தது, பிளேயிங் லெவனை தேர்வு செய்த விதம் என அனைத்தையும் விமர்சிக்கின்றனர். மற்றொருபுறம் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி ஆகியோரையும் சாடி வருகின்றனர்.

நம்பிக்கையளிக்கும் விதமாக ரகானே முதல் இன்னிங்சில் 86 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் அடித்து ஆறுதல் கொடுத்தார். அதன் பிறகு அணியின் பெருவாரியான ஸ்கோரை இரண்டாம் பாதி வீரர்களே அடித்திருக்கின்றனர்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இப்படி மோசமாக விளையாடியது குறித்து கடுமையாக சாடியுள்ளார் சுனில் கவாஸ்கர். இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார் அவர் பேசியதாவது:

“வெளிநாடு மைதானங்களில் விளையாடும்பொழுதெல்லாம், இந்திய அணி சரியாக செயல்படாமல் பெருவாரியான போட்டிகளில் தோல்வியை தழுவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்திய பேட்ஸ்மென்கள் தான். ஏன் அப்படி நடந்து வருகிறது? இதை நாம் கவனித்து சரி செய்யவேண்டும். இந்தியாவில் தாதாக்களாக இருக்கும் பேட்ஸ்மேன்கள் சிலர் வெளி மைதானங்களில் மிக மோசமாக விளையாடி வருவது அப்பட்டமாக தெரிகிறது. நான் அனைவரையும் குறிப்பிடவில்லை. முன்னணி வீரர்களாக இருக்கும் சிலரை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.” என்று ரோகித் சர்மா, விராட் கோலி புஜாரா ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் புஜாரா மூவரும் இந்திய மைதானங்களில் அல்லாமல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் மைதானங்களிலும் சேர்த்து சராசரியாக 40க்கும் கீழே வைத்திருக்கின்றனர். டெஸ்ட் போட்டிகளில் இந்த சராசரி மோசமானதாகவே எழுதப்பட்டு வருகிறது. கவாஸ்கர் குறிப்பிட்டு பேசுவதும் இதைத்தான்.

Mohamed:

This website uses cookies.