ஆபத்தான வீரர்… இந்திய அணியில் எனக்கு பிடித்த வீரர் இவர் தான்; கில்கிறிஸ்ட் ஓபன் டாக் !!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஆடம் கில்கிறிஸ்டை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

தோனியின் ஓய்விற்கு பிறகு இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்ட ரிஷப் பண்ட், இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து வருகிறார்.

ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் அடுத்த சில போட்டிகளில் சொதப்புவதையே ரிஷப் பண்ட் வாடிக்கையாக வைத்திருந்தாலும், ரிஷப் பண்ட்டிற்கு இந்திய அணி முழு ஆதரவு கொடுத்து அவரை அணியில் இருந்து நீக்காமல் அவரது முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ரிஷப் பண்ட்டும் இக்கட்டான பல போட்டிகளில் தனி ஆளாக போராடி இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்து விடுகிறார்.

என்னதான் அவசரப்பட்டு தேவையே இல்லாமல் ரிஷப் பண்ட் விரைவாக விக்கெட்டை இழப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாலும், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டத்திற்கு பெரிய ரசிகர்களாக இருப்பதை மறுக்க முடியாத உண்மை.

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நாயகனாக பார்க்கப்படும் ரிஷப் பண்ட்டை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்டும் தன் பங்கிற்கு பாராட்டி பேசியுள்ளார்.

ரிஷப் பண்ட் குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் பேசுகையில், “பொதுவாகவே எனக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் என்றால் பிடிக்கும், அதில் இடது கை வீரர்கள் என்றால் அதிகம் பிடிக்கும். அந்தவகையில், இந்திய அணியின் ரிஷப் பண்ட் சிறப்பான கிரிக்கெட் வீரர், ஆபத்தான வீரரும் ரிஷப் பண்ட் தான். ரிஷப் பண்ட்டால் யாருமே எதிர்பாராத போட்டிகளில் கூட வெற்றியை பெற்று கொடுக்க முடியும். அவரது ஆட்டத்தை பார்ப்பதே சிறப்பாக இருக்கும். அவர் விளையாடும் விதத்திலேயே அவர் எவ்வளவு திறமையானவர் என்பதை புரிந்து கொள்ளலாம். நிச்சயமாக ரிஷப் பண்ட் எதிர்கால இந்திய அணியில் முக்கியமானவராக இருப்பார், இந்திய அணியும் தொடர்ந்து அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.