டேவிட் மில்லரின் மிகப்பெரிய ரசிகையாக இருந்து வந்த குழந்தை ஆனே, புற்றுநோயால் இறந்துள்ளார். இதற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார் டேவிட் மில்லர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டேவிட் மில்லிரின் நெருங்கிய நண்பரின் குழந்தை ஆனே புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அப்போதே இதற்கு வருத்தத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் மில்லர். அதற்குப் பிறகு குழந்தையுடன் அதிக நேரங்களை மில்லர் செலவிட்டு இருக்கிறார். மேலும் குழந்தையின் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து ஆதரவாக இருந்து வந்திருக்கிறார். குழந்தையுடன் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியவில்லை என்றாலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளுக்கு குழந்தையை அழைத்துச் சென்று கண்டு களிக்க செய்திருக்கிறார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த குழந்தை ஆனே, நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார். இந்த செய்தியை கேட்டுள்ள மில்லர், மனதளவில் உடைந்திருப்பதாக தென் ஆப்பிரிக்கா அணியின் வட்டார செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
குழந்தை ஆனேயுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்த தருணங்களை ஒன்று சேர்த்து வீடியோ பதிவாக தொகுத்து இருக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு குழந்தைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஓரிரு வார்த்தைகளையும் பகிர்ந்து இருக்கிறார்.
“மீண்டும் மீண்டும் உன்னை நான் மிஸ் செய்வேன். சிறிய வயது மிகப் பெரிய உள்ளம் கொண்ட உன்னை போன்று நான் வேறு எவரையும் பார்த்ததில்லை. குறுகிய காலமே உன்னுடன் பயணித்திருந்தாலும் உன்னுடைய இந்த பயணத்தில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது பெருமிதமாக இருக்கிறது. உனது இந்த பயணத்தில் நீ சந்தித்த அனைவரையும் உன் பக்கம் ஈர்த்துள்ளாய். சிறு வயதிலேயே நீ எதிர்கொண்ட போராட்டங்கள் மிகப்பெரியது. ஆனாலும் உன் முகத்தில் நான் சிரிப்பைத் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை. வாழ்வில் நமக்கு நடக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படி மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உன்னிடம் இருந்து கற்றுக் கொண்டேன். மிஸ் யூ! லவ் யூ! ரிப்!.” என குறிப்பிட்டு இருந்தார்.
துவக்கத்தில் இந்த குழந்தை டேவிட் மில்லரின் குழந்தை என தவறாக பரப்பப்பட்டு வந்தது. பின்னர் இது டேவிட் மில்லரின் நெருங்கிய நண்பரின் குழந்தை என்று தெரிய வந்திருக்கிறது.