பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் உணவு இடைவேளைக்கு முன்பாக எடுத்திருந்தது. இதன் மூலம் 183 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது.
முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வங்கதேச அணியை 106 ரன்களுக்குச் சுருட்டினர்.
இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், சமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். துரதிஸ்டவசமாக, சுழல்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களான மயங்க் அகர்வால் 14 ரன்களிலும், ரோகித் சர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த புஜாரா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 68 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து இன்று மதியம் ஒரு மணி அளவில் துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரகானே மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். இதில் ரகானே அரைசதம் கடந்தார். 51 ரன்கள் எடுத்திருந்த ரஹானே தேஜுல் பந்தில் வெளியேறினார்.
மறுமுனையில் நிலைத்து ஆடி வந்த கேப்டன் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 27 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம் வங்கதேச அணியை விட இந்தியா 183 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. களத்தில் 130 ரன்களுடனும் விராட் கோலி இருக்கிறார். மறுமுனையில் ஜடேஜா 12 ரன்களுடன் இருக்கிறார்.
வங்கதேச வீரர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் மிகவும் திணறி வருகின்றனர்.