நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டி இருக்குமா என்ற கேள்விக்கே அதிரடியான பதிலை அளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்த புதிதாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. பகலிரவு போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்கி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
பகலிரவு டெஸ்ட் போட்டிகள் சாதாரண டெஸ்ட் போட்டிகளை போலல்லாமல் பிங்க் நிறப்பந்து பயன்படுத்தப்படும். இதனை காண மைதானத்திற்கு ஏராளமானோர் குவிந்தனர்.
பகலிரவு டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களிலும் ஏதேனும் ஒரு போட்டியாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த முடிவு திட்டமிடப்பட்டுள்ளது என கங்குலி முன்னமே அறிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுமா? ஏதேனும் ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுமா? என நிருபர்கள் கங்குலியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த கங்குலி கூறியதாவது:
“அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். ரசிகர்களிடம் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து தொடர் நடைபெற இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதற்குள் பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்து முடிவெடுக்கப்பட்டு, அதற்கான முடிவுகளை தக்க சமயத்தில் வெளியிடுவோம். நிச்சயம் ரசிகர்களை கவர்வதற்கான முயற்சிகள் பிசிசிஐ தரப்பில் இருக்கும்” என்றார்.