உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாததை அடுத்து விரக்தியில் ஓய்வு அறிவித்த சிஎஸ்கேவின் ஹைதராபாத் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு ஓய்விலிருந்து விலகியதை அடுத்து ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் நடைபெறும் விஜய் ஹஜாரே கோப்பை 50 ஓவர் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணியை வழிநடத்துகிறார் அம்பதி ராயுடு.
முன்னதாக குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த நவம்பர் 2018-ல் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
அதன் பிறகு ராயுடுதான் இந்தியாவின் நம்பர் 4-ம் நிலையின் கவலைகளைத் தீர்க்கும் வீரர் என்று கேப்டன் விராட் கோலி அறிவிக்க குஷியானார் ராயுடு.
இவரும் அந்தக் குஷியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 217 ரன்களை எடுத்தார், நியூஸிலாந்திலும் 190 ரன்களை ஒருநாள் தொடரில் எடுத்து அசத்தினார். ஆனால் ஆஸ்திரேலியா இங்கு வந்து இந்திய அணிக்கு ஒரு அடி கொடுத்த தொடரில் ராயுடு 13, 18, 2 என்று சொதப்பினார், இதனையடுத்து 4ம் நிலை கவலைதீர்க்கும் நாயகனாக கோலியால் கருதப்பட்ட ராயுடு புறமொதுக்கப்பட்டார்.
விஜய் சங்கரைத் தேர்வு செய்தது இந்திய அணி, அதற்கு எம்.எஸ்.கே.பிரசாத், ‘விஜய் சங்கர் முப்பரிமாண வீரர்’ என்றார் அதாவது 3டி வீரர் என்றார், இதனை கிண்டல் செய்யும் விதமாக ராயுடு., உலகக்கோப்பையைப் பார்க்க நான் 3டி கண்ணாடி வாங்கப்போகிறேன் என்றார் நக்கலாக. பிறகு தெலங்கானா டுடே பத்திரிகையில் தான் நீக்கப்பட்டது பெரிய அதிர்ச்சி என்று பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில் திடீரென ஓய்விலிருந்து வெளியே வர விரும்புகிறேன் சிஎஸ்கேவுக்கு ஆடுவேன், ஹைதராபாத்துக்கு ஆடுவேன் என்று சூளுரைத்தார்.
தற்போது ஹைதராபாத் கேப்டனாக நியமிக்கப்பட்டு கவரவிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் தேர்வாளர் நோயல் டேவிட் கூறும்போது, “ராயுடுவிடம் இன்னும் 5 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மீதமுள்ளது” என்றார்.
இவரும் கோலி போல் பல்ட்டி அடிக்காமல் இருந்தால் சரி என்று முணுமுணுக்கின்றனர் ராயுடு ரசிகர்கள்.