பிசிசிஐ எச்சரிக்கையால் அடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ்.. ரிஷப் பண்ட்டுக்காக டெல்லி அணியினர் செய்யவிருந்த செயலை நிராகரித்த பிசிசிஐ!

ரிஷப் பண்ட்டுக்காக டெல்லி கேப்பிட்டல் அணியினர் செய்திருந்த ஏற்பாட்டைக்கண்டு, சற்று மகிழ்ச்சி அடையாத பிசிசிஐ, செய்ய வேண்டாம் என்றும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பண்ட், ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதிலிருந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் அவரால் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் இல்லாததால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த சீசனின் முதல் போட்டியை லக்னோ அணிக்கு எதிராக விளையாடியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. அதில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையும் தழுவியது. இப்போட்டியின்போது டெல்லி வீரர்கள் அமர்ந்திருந்த டக்-அவுட் பகுதியில் ரிஷப் பண்ட் ஜெர்சியை தொங்கவிட்டிருந்தனர். இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது லீக் போட்டியை சொந்த மைதானமான டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டியின்போது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் அனைவரும் ஒரே மாதிரியாக 17ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடி ரிஷப் பண்ட்டை கௌரவிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தனர்.

இதற்கான ஏற்பாட்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் அணி நிர்வாகத்தினர் செய்து வந்தனர். சொந்த மைதானத்தில் ஒருபடி மேலே சென்று இன்னும் சில ஏற்பாடுகளை செய்திருந்தார் ரிக்கி பாண்டிங்.

இந்த ஏற்பாட்டினால் பிசிசிஐ தரப்பு மிகவும் அதிருப்தியாகியுள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு வீரருக்கு நடக்கக்கூடாதது நடந்தால் அல்லது அவர் ஓய்வு பெற்றால் இப்படி கௌரவிக்கும் விதமாக செய்யலாம். ரிஷப் பண்ட் நல்லவிதமாக காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்.

குணமடைந்து வரும் ஒருவருக்கு இப்படி செய்வது அபசகுனமாக இருக்கிறது. டெல்லி அணி நிர்வாகம் இதை தடுப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.” என்று தெரிவித்தார்.

இந்த தகவலை கேட்டதும் ரிக்கி பாண்டிங் உட்பட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினர் மிகவும் சற்று ஏமாற்றம் அடைந்ததாகவும் தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.