தொடர்ந்து சொதப்பும் ஏ.பி. டிவில்லியர்ஸ்; ரசிகர்கள் கவலை
அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன டிவில்லியர்ஸ், பிக்பேஷ் லீக்கில் தனது அடையாளத்தை இழந்து திணறிவருகிறார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ், கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக் தொடர்களில் மட்டும் ஆடிவருகிறார். டி20 உலக கோப்பையில் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில் ஆட அவர் விருப்பம் தெரிவித்ததை அடுத்து, அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், பிக்பேஷ் லீக் தொடரில் கிறிஸ் லீன் தலைமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணியில் டிவில்லியர்ஸ் ஆடிவருகிறார். டிவில்லியர்ஸ் சில போட்டிகளில் பிரிஸ்பேன் அணியில் ஆடிவிட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. அந்த அணியில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த டாம் பாண்ட்டனை நீக்கிவிட்டு டிவில்லியர்ஸை அணியில் சேர்த்தனர். ஆனால் டிவில்லியர்ஸ் தொடர்ந்து சொதப்பிவருகிறார்.
கடந்த சில போட்டிகளில் சரியாக ஆடாத டிவில்லியர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக இன்று நடந்துவரும் போட்டியில் படுமோசமாக ஆடினார். பிரிஸ்பேனில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் வெறும் 126 ரன்கள் மட்டுமே அடித்தது.
மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்துகளை பறக்கவிடும் வழக்கமுடையதால் மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் டிவில்லியர்ஸ், பிக்பேஷ் லீக்கில் தொடர்ந்து சொதப்பிவருகிறார். டிவில்லியர்ஸின் படுமோசமான ஃபார்ம், அவரை அதிகமாக நம்பியும் சார்ந்தும் இருக்கும் ஆர்சிபி அணிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.