சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி குழுவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்திருக்கிறார் நட்சத்திர வீரர். இதைக் கண்ட ரசிகர்கள் சற்று கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்தியாவில் இருந்து கடந்த மாதம் 20ஆம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பலரும் துபாய் மற்றும் அபுதாபி சென்று விட்டனர். அங்கு சென்று தனிமைப்படுத்துதலில் தங்க வைக்கப்பட்டு, அடுத்த கட்ட கொரோனா பரிசோதனை முடிந்தவுடன் இயல்புநிலை பயிற்சிக்கு திரும்பினர்.
சென்னையில் இருந்து துபாய் சென்றடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மத்தியில் தொடர்ந்து சலசலப்புகள் நிலவி வந்தன. முதலாவதாக வீரர்களுக்கு நடந்த பரிசோதனையில் தீபக் சஹர் உட்பட இரண்டு வீரர்கள் மற்றும் 11 அணி நிர்வாகிகள் என மொத்தம் பதிமூன்று பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் பிறகு நான்கு நாட்கள் இடைவெளியில் இரண்டாம் கட்ட பரிசோதனையை நடத்தியதில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவு வந்ததால் செப்டம்பர் 4ம் தேதி முதல் இயல்புநிலை பயிற்சிக்கு வீரர்கள் திரும்பினர். இருப்பினும் தீபக் சஹர் மேலும் நான்கு நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தீபக் சஹர் நேற்று அணி வீரர்களுடன் இயல்புநிலை பயிற்சிக்கு திரும்பியிருக்கிறார். இந்த செய்தியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பக்கம் தெரிவித்திருந்தது. தீபக் சஹர் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்கிற கேள்வி நிலவி வந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் சென்னை வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்த சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து தனது சொந்த காரணங்களுக்காக சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவர்கள் இருவரும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.