சென்னை அணிக்கு மேலும் ஒரு இழப்பு; காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஒட்டுமொத்த ரசிகர்களின் இரண்டு வருட எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ஒவ்வொரு போட்டியில் மாஸ் காட்டி, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதில் 5 5 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
சென்னை அணி பேட்டிங்கில் முழு பலம் பெற்றிருந்தாலும் பவுலிங்கில் ஒவ்வொரு போட்டியிலும் திணறி வருகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் பந்துவீச்சிற்கு மேலும் ஒரு பின்னடைவாக சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் தீபக் சாஹர் தனது 3வது ஓவர் வீசும் போது காயமடைந்ததால், பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில நாட்கள் தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் தீபக் சாஹர் அடுத்த இரண்டு வாரங்கள் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த தீபக் சாஹர் இதுவரை 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தீபக் சாஹர் விலகியிருப்பது சென்னை அணிக்கு நிச்சயம் பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை