ஒரே போட்டியின் மூலம் தரவரிசையில் ஜெட் வேகத்தில் முன்னேறிய தீபக் சாஹர்
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தீபக் சாஹர் சர்வதேச டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் அசுர வேகத்தில் முன்னேறியுள்ளார்.
நாக்பூர் டி20 போட்டியில் வங்கதேச அணி கடைசி 8 விக்கெட்டுகளை 34 ரன்களில் இழந்து தோல்வி கண்டதற்கு ஹாட்ரிக் நாயகன் தீபக் சாஹரின் அபாரப் பந்து வீச்சு பெரிய காரணமாகும், மேலும் 7 ரன்களுக்கு 6 விக்கெட் என்று டி20 உலக சாதனைப் பந்து வீச்சாகவும் அது அமைந்தது.
இந்நிலையில் டி20 தரவரிசையில் எங்கோ இருந்தவர் இந்த ஹாட்ரிக், 6 விக்கெட்டுகள் சாதனைப் பந்து வீச்சுக்குப் பிறகு 88 இடங்கள் முன்னேறி 42ம் இடம் பிடித்துள்ளார்.
ஆனால் இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங் தரவரிசையில் 7ம் இடம் பிடித்துள்ள ரோஹித் சர்மா இந்த வடிவத்தில் டாப் 10-ல் இருக்கும் ஒரே இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் 8ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம் வகிக்கும் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் டேவிட் மலான் 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா டி20 கேப்டன் ஏரோன் பிஞ்ச் 4ம் இடத்திலிருந்து 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், நியூஸிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்தில் இணைந்து 9ம் இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடம் பிடித்துள்ளார்.