ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின் ‘F’ பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. மெக்ஸிகோ மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதிய ஆட்டம் எக்கத்தரின்பூர்க் மைதானத்திலும், ஜெர்மனி மற்றும் தென் கொரியா அணிகள் ஆடிய ஆட்டம் கஸான் மைதானத்திலும் நடைபெற்றன. ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றுக்குத் தகுதிபெற இப்பிரிவில் மூன்று அணிகளுக்கு இடையேயும் கடும்போட்டி நிலவியதால், இவ்விரண்டு ஆட்டங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்பட்டன.
இரண்டு ஆட்டங்கள் முடிவுபெற்றிருந்த நிலையில், 6 புள்ளிகளுடன் மெக்ஸிகோ அணி முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற இன்றைய ஆட்டத்தில் ‘டிரா’ செய்தாலே போதும் என்ற நிலையில் அந்த அணி களமிறங்கியது. அதே நேரத்தில் இப்போட்டியில் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்வீடன் அணி களமிறங்கியது.
மெக்ஸிகோவிற்கு சோதனையான துவக்கம்
ஆட்டம் தொடங்கிய சில நொடிகளில் மெக்ஸிகோ ஒரு விரும்பத்தகாத வரலாற்றைப் படைத்தது. மேட்ச் தொடங்கி 13 நொடிகளே ஆனபோது மெக்ஸிகோ அணியின் கலர்டோவுக்கு, ரெஃப்ரி யெல்லோ கார்டு வழங்கினார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக விரைவில் வழங்கப்பட்ட கார்டு இதுவாகும். தொடக்கம் முதலே அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்ட போதும், இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. கோல் எதுவுமின்றி முதல்பாதி முடிவுக்கு வந்தது.
இரqண்டாம் பாதி தொடங்கியதும் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல்களைத் தடுத்த கோல் கீப்பரான மெக்ஸிகோவின் கிலெர்மோ ஓச்சோவாவின் ( Guillermo Ochoa), அரண் உடையத் தொடங்கியது. 50-வது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு அருகே இருந்த ஸ்வீடனின் லுட்விக் அகஸ்டின்சன் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
அதிரடியை காட்டிய ஸ்வீடன்
60-வது நிமிடத்தில் மெக்ஸிகோ அணியின் மொரேனோ செய்த தவறால், ஸ்வீடனுக்கு பெனால்டி வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஸ்வீடன் அணியின் கேப்டன் ஆண்ட்ரே கிரான்க்விஸ்ட், இரண்டாவது கோலை அடித்தார். அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் ஸ்வீடன் அணியின் வாய்ப்பு பிரகாசமானது.
இதனால் மெக்ஸிகோ அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருவேளை தென்கொரியா அணிக்கு எதிராக ஜெர்மனி வெற்றி பெற்றால் கோல் வித்தியாச கணக்குப்படி ஜெர்மனி அடுத்த சுற்றுக்கும், மெக்ஸிகோ லீக் போட்டிகளோடு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஸ்வீடன் மேலும் கோல் அடிக்காமல் பார்த்துக்கொள்வதோடு, ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என மெக்ஸிகோ அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டது.
ஸ்வீடன் வீரர்கள் மெக்ஸிகோவின் எல்லைக்குள்ளேயே வலம் வந்தனர். இந்நிலையில், 74-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியிடமிருந்து டிஃபண்ட் செய்ய முயன்று சேம் சைடு கோல் போட்டார் மெக்ஸிகோவின் அல்வரேஷ். இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வலுவான நிலைக்குச் சென்றது. ஆட்டநேர இறுதிவரை மெக்ஸிகோவால் எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. 3-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற ஸ்வீடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம் ஸ்வீடன் கடைசியாகப் பங்கேற்ற நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் ‘நாக்-அவுட்’ சுற்றுக்குத் தகுதிபெற்று சாதனைப் படைத்திருக்கிறது.
ஜெர்மனி படுதோல்வி
மெக்ஸிகோ மற்றொரு போட்டியின் முடிவுக்காகக் காத்திருந்தது. நல்லவேளையாக நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியா வீழ்த்தியது. இதனால் இரண்டாம் இடத்துக்குப் போட்டி ஏதுமின்றி நூலிழையில் தப்பித்து ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றுக்குத் தகுதிபெற்றது மெக்ஸிகோ.