விராட் கோலி, ரோஹித் சர்மா கிடையாது, இந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனை யாராலும் புறக்கணிக்க முடியாது ;தினேஷ் கார்த்திக் திட்டவட்டம்..
2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஷிகர் தவானை யாராலும் புறக்கணிக்க முடியாது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் இந்திய அணிக்காக மூன்று விதமான தொடரிலும் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான், தற்பொழுது இந்திய அணிக்காக ஒருநாள் தொடரில் மட்டுமே பங்கேற்று விளையாடிய வருகிறார்.
ஐசிசியால் நடத்தப்படும் பெரிய தொடர்களில் எப்பொழுதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நற்பெயரை பெற்ற ஷிகர் தவான் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில் இந்திய அணியை வழிநடத்தும் வீரராகவும் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
குறிப்பாக 2022டி.20 உலகக் கோப்பை தொடருக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இளம் வீரர்கள் கொண்ட படையை தலைமை ஏற்று வழி நடத்திய ஷிகர் தவான் 3-0 என தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அதற்குப்பின் தற்போது நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷிகர் தவான்,இளம் வீரர்கள் கொண்ட படையை வழிநடத்தி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். என்னதான் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியிருந்தாலும் இந்திய அணியை இவர் வழிநடத்திய விதமும், துவக்க வீரராக இவர் செயல்பட்ட விதமும் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் பாராட்டை பெற்றுள்ளது.
குறிப்பாக ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷிகர் தவானை 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் யாராலும் புறக்கணிக்க முடியாது என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணி குறித்தும் இந்திய அணி வீரர்கள் குறித்தும் வெளிப்படையான தன்னுடைய கருத்துக்களை பேசி வரும் இந்திய அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்., 2023 உலக கோப்பை தொடரில் ஷிகர் தவான் இல்லாமல் இந்திய அணி செயல்படாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் தெரிவித்ததாவது, “எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உலகக் கோப்பை தொடரின் துவக்க வீரராக ஷிகர் தவான் தான் செயல்படுவார் என தோன்றுகிறது, இல்லையென்றால் அவரை இந்திய அணி வைத்திருக்காது. குறிப்பாக ஷிகர் தவானுக்கு 30 வயதை கடந்து விட்டதால் அவரை அணியில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இந்திய அணிக்கு கிடையாது, ஆனால் ஒரு நாள் தொடரில் அவர் இந்திய அணிக்கு தேவை என்பதால் மட்டுமே அவரை வைத்திருக்கிறார்கள்.
ஐசிசி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை படைத்த ஷிகர் தவான் தற்பொழுது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பாகவே விளையாடினார். காயம் ஏற்படுவதற்கு முன்பு வரை இவருடைய ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது, இக்கட்டான நிலை வரும்வரை அல்லது மோசமான பார்ம் காரணமாக மட்டுமே ஷிகர் தவான் போன்ற ஒரு வீரரை அணியிலிருந்து தூக்க முடியும், இந்திய அணியின் துவக்க வீரராக ஒரு வீரர் சிறப்பாக செயல்படுவார் என்றால் நாம் ஷிகர் தவானை தைரியமாக நம்பலாம், அவருக்கு அணியின் திட்டம் நன்றாகவே தெரியும் அவர் எதற்காகவும் தயாராகவே இருப்பார், மேலும் அணியை வழிநடத்திய பக்குவமும் அவரிடம் உள்ளது”என்று ஷிகர் தவானை தினேஷ் கார்த்திக் வெகுவாக பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.