ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய பெங்களூர் அணியின் இளம் வீரர் தேவ்தட் படிக்கல் இந்திய அணியிலும் விரைவில் இடம்பிடிப்பார் என பி.சி.சி.ஐ., தலைவரான சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் டி.20 தொடரில் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களே சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் இளம் வீரர்களுக்கே இந்த தொடரில் அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாடி வருகிறது, இளம் வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் மிக சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக பெங்களூர் அணியின் தேவ்தட் படிக்கல், ஹைதராபாத் அணியில் நடராஜன் ஆகியோர் இந்த தொடரின் மூலம் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துவிட்டனர். இதில் நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தேவ்தட் படிக்கல்லும் இந்திய அணிக்காக விரைவில் விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பி.சி.சி.ஐ, தலைவருமான சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கங்குலி பேசுகையில், “படிக்கல் திறமையான வீரர். டி20 கிரிக்கெட் என்பது அவருடைய முதல்கட்டம்தான். நான் அவர் ஈடன் கார்டனில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி பார்த்திருக்கிறேன். அந்தப் போட்டியில் மேற்கு வங்கமும், கர்நாடகமும் அரையிறுதியில் மோதியது. அதில் படிக்கல் மிகச்சிறப்பாக விளையாடினார். வேகப்பந்துவீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டு விளாசுகிறார். இன்னும் சில சீசன்கள் போகட்டும் நிச்சயம் அணியில் இடம்பெறுவார். இந்தியாவுக்கும் தொடக்க வீரர்கள் தேவைப்படுகிறார்கள்” என்றார்.
ஆர்சிபி அணிக்காக தொடக்க வீரராக ஐபிஎல்லில் விளையாடிய தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். பெங்களூர் அணியில் அதிகபட்ச ரன்களை சேர்த்தவர் படிக்கல் மட்டுமே. இந்த ஐபிஎல்லில் 473 ரன்களை எடுத்துள்ளார். இது அந்த அணியின் தூண்களான கோலி, ஏபி டிவில்லியர்ஸைவிட அதிகம்.