எனது இடத்தில் இந்த வீரர் பேட்டிங் இறங்கினால் மிகவும் சரியாக இருக்கும் என ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருப்பதால், இதில் பங்கேற்பதற்காக வீரர்கள் பலர் ஏற்கனவே துபாய் சென்றுவிட்டு கொரோனா பரிசோதனை முடிந்தவுடன் இயல்புநிலை பயிற்சிக்கு திரும்பிவிட்டனர். இந்த தொடர் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரத்திற்கும் குறைவான காலங்களே இருக்கும் நிலையில் முறையான பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2 வீரர்கள் உள்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு, பிறகு இரண்டாம் கட்ட பரிசோதனையின் வீரர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்த சுரேஷ் ரெய்னா திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் அறிவித்த சில நாட்களிலேயே மற்றுமொரு நட்சத்திரமான ஹர்பஜன் சிங்கும் தனது சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது இவர்கள் இருவருக்குமான சரியான மாற்று வீரரை சென்னை அணி அறிவிக்க உள்ளது.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இறங்கும் மூன்றாவது இடத்திற்கு வேறு யார் இறங்கினால் சரியாக இருப்பார்? என அவரே தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார். இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில்,
“நான் இறங்கும் மூன்றாவது இடத்திற்கு சரியான வீரர் அணியின் கேப்டன் தோனி இருப்பார். ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது சில போட்டிகளில் மூன்றாவது இடத்தில் இறங்கி வந்தார். அதன் பிறகு அணியின் தேவைக்கு ஏற்ப கீழ் வரிசையில் இறங்கினார். இவர் மூன்றாவது இடத்தில் இறங்கும் பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியை வெளிப்படுத்தி 148 ரன்கள் குவித்தது தற்போது வரை யாராலும் மறந்திருக்க முடியாது.
எந்த இடத்திலும் இறங்க கூடியவர் தோனி என்பதால், மூன்றாவது இடத்திற்கும் அவர் சரியாக இருப்பார் என நான் கருதுகிறேன்.” என்றார்.