சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஷேன் வாட்சன் மற்றும் அம்பட்டி ராயுடு தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கினர்.
அம்பட்டி ராயுடு 12 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். ஷேன் வாட்சன் நன்கு அதிரடியாக விளையாடி 39 ரன்களில் எடுத்தபோது ஆர்ச்சர் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னாவும் கேப்டன் தோனியும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதிகபட்சமாக ரெய்னா 35 பந்துகளி 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடி தோனி 33 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டையும் ரஹானே விக்கெட்டையும் பறிகொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாறியது. அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் 21 ரன்களில் வெளியேறினார்.
பட்லர் மட்டும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார். சிறப்பாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 19.5 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் 10 புள்ளிகளைப் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.