தோனியை கட்டம் கட்டும் தேர்வுக்குழு!! ஓய்வு பெறச்சொல்லி நெருக்கடி..

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஓய்வு பெறவில்லை என்றாலும் தேர்வுக்குழு அவரை அடுத்தடுத்த தொடர்களில் எடுக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய விக்கெட் கீப்பர் எம் எஸ் தோனியின் ஓய்வு குறித்து கேள்விகள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி வரை நின்று நிச்சயம் வெற்றி பெற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக மயிரிழையில் ரன் அவுட் ஆகி வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதியில் இந்திய அணி 18 ரன்களுக்கு தோல்வியை தழுவி உலக கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியது. பல கோடி மக்களின் உலக கோப்பை கனவும் அத்தருணமே தகர்ந்தது. இதன் பிறகே, சமூக வலைதளங்களில் திரும்பும் இடமெல்லாம் தோனி ஓய்வு பெறுகிறார் தோனி ஓய்வு முடிவை அறிவிப்பார் என்கின்ற வாசகம் காணப்பட்டது.

தோனி ஓய்வு எப்போது என்கின்ற கேள்வி கேப்டன் விராத் கோலியிடமும் கேட்கப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதற்கு பதிலளித்த கோலி, “தோனி எங்களிடம் ஓய்வு பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார். ஆனாலும் ரசிகர்கள் விட்டபாடில்லை.

இதற்கிடையில் 2020ஆம் ஆண்டு வரவிருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் தோனி ஆடுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு அமைப்பு இவருக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுத்து வருகிறது. தோனி ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த தொடர்களில் தோனியை எடுக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர்பேசுகையில், தோனிக்குப் பின்னால் ரிஷப் பன்ட் போன்ற இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட்டு தோனி ஓய்வு பெறுவது சிறந்தது. உலகக் கோப்பையில் தோனியின் ஆட்டத் திறனைப் பார்த்தோம். அவர் கடைசி கட்டத்தில் அதிகமாகத் தடுமாறுகிறார். எந்த பந்துகளையும் அவரால் சரிவர எதிர்கொள்ள முடியவில்லை. இது அணியின் வெற்றியை மோசமாக பாதிக்கிறது. அடுத்து நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அவர் எடுக்கப்படமாட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இனியும் சாதிக்கவோ, நிரூபிக்கவோ ஏதுமில்லை. அதனால் அவராகப் பெருந்தன்மையோடு ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையென்றால் அவரை அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்றார்.

இதுபற்றி இந்திய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், தோனியிடம் விரைவில் பேச இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.