இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான எம் எஸ் தோனி உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தியாவிற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் நன்கு செயல்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்தியாவிற்கு கேள்விக் குறியாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்டிங்.
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் கே எல் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்த போது, கோலி மற்றும் ரோஹித் நல்ல பார்ட்னெர்ஷிப் அமைத்தனர். அதன் பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவர ஆடாததே தோல்வியின் பிரதான காரணமாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக இறுதிக்கட்ட ஓவர்களில் கேதர் ஜாதவ் மற்றும் தோனி இருவரும் பவுண்டரிகள் அடிக்க முனைப்பு காட்டாமல் ஒரு ரன், 2 ரன்கள் எடுக்க முயற்சி செய்தது கடும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டது.
இந்த உலககோப்பையில், தோனி இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 223 ரன்கள் அடித்துள்ளார். 93 ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்தாலும், துவக்கத்தில் நிறைய பந்துகளை வீணாக்கிறார் என கடுமையாகவும் சாடப்பட்டது.
வழக்கமாக இந்திய அணிக்கு கீழ் வரிசையில் களமிறங்கும் தோனி ஆட்டத்தை ஃபினிஷ் செய்வதில் கைதேர்ந்தவர் என அனைவராலும் புகழப்பட்ட ஒன்று. ஆனால், கடந்த சில தொடர்களாக இந்திய அணிக்கு அதை செய்ய தோனி தவறி வருகிறார். இதே தவறை கடந்த வங்கதேச அணிக்கு எதிராக வும் நம்மால் காண முடிந்தது. ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் மோசமாக இருந்ததை விமர்சனங்களின் வாயிலாக அறிந்திருப்போம்.
இருப்பினும், இந்திய அணி பந்து வீச்சில் ஈடுபடுகையில் வீரர்களுடன் தோனியின் ஈடுபாடு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பல வீரர்கள் தங்களது பேட்டிகளில் புகழ்ந்து இருப்பதையும் நாம் கடந்துதான் வந்திருப்போம்.
கடைசி கட்ட ஓவர்களில் விராட் கோலி எவ்வித டென்ஷனும் இன்றி மைதானத்தில் இருப்பதற்கு தோனியின் பங்களிப்பு பெரிதும் இருக்கிறது. தனது கேப்டன் அனுபவங்களை ஒவ்வொரு போட்டியிலும் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவருக்கும் பகிர்ந்திருப்பதை ரசிகர்களும் அறிந்திருப்பர்.
இவை ஒருபுறம் இருக்க, இந்திய அணிக்காக ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்று தந்துள்ள ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனி கொண்டிருக்கிறார். டி20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என எதையும் நம்மால் எளிதில் மறக்க இயலாதவை.
இந்நிலையில், 37 வயதான தோனி, ஏற்கனவே தோனி 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து எதிர்பாராத விதமாக ஓய்வு பெற்றார். அதேபோல, உலகக்கோப்பை முடிந்தவுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், “தோனி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை துறந்த பொழுதே, உலகக்கோப்பை வரை மட்டுமே தொடர இருப்பதாக ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்” என்றார்.
வெளியாகி வரும் தகவல்கள் உண்மையாக இருப்பின், இந்தியா இறுதிப்போட்டிக்கு சென்றால், சச்சினை வழியனுப்பியதை போலவே, தோனியையும் கோப்பையுடன் வழியனுப்புவதே இந்திய அணிக்காக அவர் கொடுத்த பங்களிப்பிற்க்கு சிறு பரிசாக இருக்க முடியும்.