“போறப்போ.. தோனி இப்படி பண்ணிட்டாரே!” முன்னாள் பாக்., தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
ஓய்வு பெற்றுச் செல்லும் தருவாயில் தோனி இப்படி ஒரு தவறை செய்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. அதனால் சில மாதங்களிலேயே ஓய்வு பெறுவார் என தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
அதன் பிறகு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற பிறகு ஓய்வு பெறுவார் என எதிர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இப்படி தோனி ஓய்வு முடிவை அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தோனியின் இந்த ஓய்வு முடிவிற்கு இந்தியாவில் பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து, ஓய்வுக்குப் பின்னர் அவர் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படி இருக்க, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு முடிவு முற்றிலும் தவறானது. கிரிக்கெட் வாழ்க்கை முடியும் நேரத்தில் இப்படி ஒரு தவறை செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என ஆதங்கத்துடன் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் தெரிவித்ததாவது:
“தோனி கிரிக்கெட் உலகில் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கிறார். லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஒரு வீரர் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கையில் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் வீட்டில் அமர்ந்திருக்கையில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவர் ஓய்வு பெறும் தருவாயில் இருந்தார். இப்படி ஓய்வு பெற்றுச் செல்லும் நேரத்தில் ஒரு தவறான முடிவை எடுத்திருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நானும் தோனியின் கேப்டன்சி-க்கு ரசிகன்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நான் இதுபோன்ற அறிவுரையை கூறினேன். மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற ஒருவர் மைதானத்திலேயே ஓய்வு பெறுவது சரியானது.” என குறிப்பிட்டார்.