எனது அதிரடி ஆட்டத்திற்கு இந்த இரண்டு பேர் தான் காரணம்; இஷான் கிஷான்
கொல்கத்தா அணியுடனான தனது அதிரடி ஆட்டத்திற்கு தோனி மற்றும் ரோஹித் சர்மா வழங்கிய டிப்ஸ் தான் காரணம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இளம் வீரரும் 19 வயதான இஷான் கிஷான் 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அதிரடியாக பேட் செய்தார். 211 ரன்கள் இலக்கை விரட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன் குவிப்புக்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இஷான் கிஷான் முக்கியக் காரணமாகும். ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி வாங்க முயன்ற நிலையில், ரூ.6.20 கோடிக்கு இஷான் கிஷானை மும்பை அணி வாங்கியது.
இந்த வெற்றிக்குப் பின் இஷான் கிஷான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
”19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று அதிரடியாக ரன் சேர்த்ததைப் பார்த்து என்னை மும்பை அணி ஐபிஎல் ஏலத்தில் விலைக்கு வாங்கியது. ஆனால், தொடக்கத்தில் என்னால் அணியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாட முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் என்னை 4-வது வீரராகவும், கடைசியிலும் களமிறக்கினார்கள். அதனால் என்னால் நினைத்ததுபோல் பேட் செய்ய இயலவில்லை.
ஏனென்றால், நான் தொடக்க ஆட்டக்காரராகவும், ஒன்டவுனிலும் களமிறங்கி விளையாடுபவன். என்னை கடைசி வரிசையில் களமிறக்கியபோது, என்னுடைய பேட்டிங் திறமையை நிரூபிக்க முடியாமல் போனது.
இதைப் பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன், ரோகித் அண்ணன், என்னிடம் பேசினார். ‘உன்னுடைய இயல்பான ஆட்டத்துக்கு ஏன் திரும்பவில்லை. 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் பேட் செய்வதுபோல் விளையாடு. நீ விரைவாக ஆட்டமிழந்தாலும் உனக்குப் பின்னால் மற்ற வீரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உன்னுடைய இயல்பான ஆட்டத்தில் நீ விளையாடு’ எனத் தெரிவித்தார்.
அணியின் பயிற்சியாளரும் இதேபோன்று பேசி எனக்கு ஊக்கமளித்தார். இந்த போட்டியில் களமிறங்கும் முன்புகூட ரோகித் அண்ணன் எனக்கு பேட்டிங்கில் பல்வேறு டிப்ஸ்களை அளித்தார். குறிப்பாக சுழற்பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும், லெக் ஸ்பின்னையும், கூக்ளி பந்துவீச்சையும் எதிர்கொள்வது குறித்தும் எனக்கு டிப்ஸ்களை ரோகித் வழங்கினார்.
குல்தீப்பின் பந்துவீச்சை ஏற்கெனவே நான் விளையாடி இருப்பதால், எனக்குப் பெரிதாக பயம் இல்லை. கையில் இருந்து பந்து வெளியேறும் போதே கணித்து ஆடத் தொடங்கினேன். அது எனக்கு சரியான பலனை அளித்து, அடித்து ஆட துணைபுரிந்தது.
மற்றொரு முக்கிய வீரரான மகேந்திர சிங் தோனி எனக்கு கீப்பிங் குறித்தும், ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவது குறித்தும் எனக்குப் பயிற்சி அளித்தார். அவரிடம் இருந்து ஹெலிகாப்டர் ஷாட்களை ஆடுவது குறித்து நான் கற்றுக்கொண்டேன். ஹெலிகாப்டர் ஷாட்களை விளையாடும் முன் பந்துவீச்சை நன்கு கவனி, களத்தின் சூழலை அறிந்துகொள், களத்தில் நிலைப்படுத்திக்கொள் என்று பல்வேறு டிப்ஸ்களை தோனி எனக்கு வழங்கினார்.
தோனி மிகப்பெரிய லெஜெண்ட். அவர் இப்போது எதிரணியாக இருந்தாலும், எனக்கு பல்வேறு ஆலோசனைகளையும், பேட்டிங் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்தார். இவர்கள் இருவரின் ஆலோசனையே எனக்கு இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடத் துணை புரிந்தது.” என்று தெரிவித்துள்ளார்.