எப்போதுமே சந்தோஷமாக இருப்பது எப்படி என நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது. உலக கோப்பைக்கு பிறகு மகேந்திர சிங் டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து சற்று விலகியே இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திடீரென இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டார்.
அதன்பிறகு அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேலும் இரண்டு மாதங்கள் விடுப்பு எடுத்து தனது குடும்பத்துடன் செலவழித்து வருகிறார். மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜீவா இருவருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் செய்கிறார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய மூவரும் தக்கவைக்கப் பட்டிருக்கின்றனர். இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட மூவரும் சென்னை வந்திருந்தனர்.
அச்சமயம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் நிருபர் ஒருவர், “அமைதியாகவும் சந்தோஷமாகவும் எப்போதுமே காணப்படுகிறார்கள். ஏன் அதற்கு காரணம் என்ன?” எனக் கேட்டதற்கு தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பதில் அளித்தார் தோனி.
அவர் பேட்டி அளித்ததாவது:
எல்லா ஆண்களும் திருமணத்துக்கு முன்பு முழுமை அற்றவர்கள் தான். கிடைக்கும் நேரங்களை மனைவி மற்றும் மகளுடன் செலவழிக்கிறேன். 50 வயதுக்குப் பிறகுதான் திருமணத்தின் சாரம் புரியும். 55 வயது தான் உண்மையான காதலுக்கான வயது என்பேன். அப்போதுதான் வழக்கமான வேலையில் இருந்து நீங்கள் விலகி நிற்பீர்கள்.
என் மனைவி விஷயத்தில் நான் இப்பொழுது தலையிடுவதில்லை. அவருக்குத் தேவையான அனைத்தையும் அவரே முடிவு செய்துகொள்ள விட்டுவிடுவேன். என் மனைவுக்கு மகிழ்ச்சி என்றால் அது எனக்கும் மகிழ்ச்சியே. அவர் கேட்கும் எதற்கும் நான் சரி என்று சொன்னால் அவர் மகிழ்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது எனவே நான் மகிழ்ச்சியாக தென்படுகிறேன் என்று கூறியுள்ளார்.