இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி போட்டி இந்த மைதானத்தில் நிச்சயம் நடைபெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் கங்குலியின் நெருக்கமான நண்பருமான விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றுவிட்டார். அவர் அறிவித்த அந்த நிமிடத்தில் இருந்து தற்போது வரை அவரைப் பற்றின பேச்சுக்கள் குறைந்த வண்ணம் இல்லை. இத்தகைய பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிக்கு பிறகு ஆடவில்லை.
மீண்டும் இந்திய அணியில் எப்போது ஆடுவார் என ரசிகர்கள் தொடர்ந்து ஆவலோடு இருந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக பயிற்சியைத் தொடங்கினார் தோனி. ஆனால் துரதிஸ்டவசமாக ஐபிஎல் போட்டிகள் சுமார் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.
இறுதியாக செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்க இருந்தது. அதற்கு முன்னதாகவே இப்படி மகேந்திர சிங் தோனி ஓய்வு முடிவை அறிவித்திருப்பது பெரும் சோகத்தில் அனைவரையும் ஆழ்த்தியிருக்கிறது.
இந்திய அணிக்காக பல கோப்பைகளை பெற்று தந்திருக்கும் தோனி அதன்மூலம் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் ஒருவர் மைதானத்தில் ஓய்வு பெறாமல் வீட்டில் அமர்ந்தபடியே ஓய்வு பெற்றதனால் பிசிசிஐ தோனிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என மிகவும் வருத்தத்தில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்த நேரத்தில் தோனியின் இறுதிப்போட்டிய இந்த மைதானத்தில் நடைபெற்று அவருக்கான உரிய மரியாதை அளிக்கப்படும் என விவிஎஸ் லக்ஷ்மன் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்
“தோனி இந்திய அணிக்காக பல கோப்பைகளை பெற்றுத் தந்திருக்கிறார். இவருக்கு கடைசி போட்டி இந்திய அணியில் நடக்கவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் தோனி சென்னை அணிக்காக தொடர்ந்து ஆடுவார். சென்னை ரசிகர்களை மகிழ்விக்க அவர் தொடர்ந்து முயல்வார். சச்சின் டெண்டுல்கருக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கடைசிப் போட்டி நடத்தப்பட்டது.
அதேபோல் தோனிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி போட்டி நடத்தப்படும். இதனை உலகில் உள்ள ரசிகர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பர்.” என உறுதியாக கூறினார்.