ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய டி-20 அணியில் தோனி இடம்பெறாததால், அவரின் டி-20 கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்று சி.எஸ்.கே அணி வீரர் பிராவோ கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மோசமான பேட்டிங் ஃபார்மால் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். 2018-ம் ஆண்டில் மிகப் பெரிய அளவில் தோனி ரன்களைச் சேர்க்க தவறியதால், சர்வதேச கிரிக்கெட்டில் கடினமான சூழலை சந்தித்து வருகிறார். 37 வயதான மூத்த வீரர் தோனிக்குப் பதிலாக குறைந்த ஓவர்கள் போட்டிகளில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்புக் கொடுக்க தேர்வுக்குழு முடிவு எடுத்தது. தற்போது, ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெறாத தோனி, சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வு எடுத்து வருகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 அணியில் தோனி இடம்பெறாமல் போனதாலேயே, அவரது டி-20 கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாடும் டுவைன் பிராவோ கூறியுள்ளார். தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
“தோனி முடிவு எடுக்கும் வரை அவரது டி-20 கிரிக்கெட் வாழ்க்கை முடியாது. எப்போதும் அவரின் ஓய்வு குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆண்டின் ஐ.பி.எல் போட்டியில் கூட தான் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார். தோனி எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை அவரே முடிவு செய்ய முடியும். வேறு யாரும் அதை முடிவு செய்ய முடியாது.”