தோனிக்கும் விராட் கோலிக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்; கௌதம் கம்பீர் கருத்து!

மகேந்திர சிங் தோனிக்கும் விராட் கோலிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் இது மட்டும்தான் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிறந்த அணியாக திகழ்ந்துவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 10 சீசன்கள் விளையாடி 8 முறை இறுதிப் போட்டிக்குச் சென்று, மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது. துவக்கத்தில் இருந்து சென்னை அணியை வழிநடத்திச் செல்லும் மகேந்திரசிங் தோனி சிறந்த கேப்டனாகவும் திகழ்கிறார்.

ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஆடிய 12 சீசன்களில் இரண்டு முறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. அந்த அணிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி ஒரு முறை கூட கோப்பையை வென்று தந்தது இல்லை என்ற அவர் பெயருடன் இருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் கோஹ்லி சிறந்த வீரராக இருந்தாலும் சிறந்த கேப்டன் இல்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகின்றன. இந்த நிலையில் விராட் கோலிக்கும் தோனிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் இதுதான் என கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“தோனி, சென்னை அணியில் ஒரு சில வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர்களை அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வைக்கிறார். அவர்களின் விடாமுயற்சியை எப்போதும் பரிசோதித்து வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கிறார். ஆனால் விராட் கோலி அந்த அளவிற்கு பொறுமையாக இருப்பதில்லை. ஒரு சில போட்டிகளில் வீரர்கள் சொதப்பினால் அவர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார். தொடர்ந்து அணியில் மாற்றம் செய்து கொண்டே வந்தால் அணியில் இருக்கும் இணக்கம் குறைந்துவிடும். வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களின் விடாமுயற்சி வெளிப்படும். அதை வைத்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தரலாம். அதற்கு முதலில் மன அமைதி தேவை. அந்த அமைதி விராட் கோலிக்கு நிச்சயம் வேண்டும். பெங்களூரு அணிக்கு மட்டுமல்லாது; இந்திய அணிக்கும் இது உதவிகரமாக இருக்கும்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.