வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 11 ரன்களை எடுத்த செடேஷ்வர் புஜாராவின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
இந்திய கெப்டன் விராட் கோலியே அன்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும், சிங்கிள் கூட எடுக்காமல் ஆடுவது எந்த நிலையிலும் பயனளிக்காது, அடித்து ஆடுவது என்பது ஒரு மனநிலை, தளர்வான பந்துகளைக்கூட அடிக்காமல் ஆடுவது பயனளிக்காது, இப்படியாடினால் ஒரு பந்து உங்களைக் கபளீகரம் செய்து விடும் என்று புஜாராவை சூசகமாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டனும் நம்பர் 3 வீரருமான, கர்னல் என்று செல்லமாக அழைக்கப்படும் திலிப் வெங்சர்க்காரும் புஜாரா விமர்சனத்தில் இணைந்தார்.
அவர் கூறும்போது, “புஜாரா நிறைய ரன்களை எடுத்துள்ளார், ஆனால் அவர் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவருடன் பேட் செய்யும் எதிர் முனை வீரருக்கு கடும் நெருக்கடிதான் ஏற்படும். நீண்ட நேரம் ஸ்ட்ரைக் இல்லாமல் எதிர்முனை வீரர் ரன்னர் முனையில் இருந்தால் அவரது ரிதம் பாதிக்கப்பட்டு ஆட்டமிழக்கவே நேரிடும்.
நியூஸிலாந்து அணியினர் 225/7 என்ற நிலையில் இருந்த போது ஆட்டத்தை கோட்டை விட்டோம். ஷார்ட் ஷார்ட்டாக வீசி அவர்களின் பின் வரிசை வீரர்களை ரன்கள் எடுக்க அனுமதித்தோம். நியூஸி, ஆஸி. , இங்கிலாந்து வீரர்கள் ஷார்ட் பிட்ச் உத்தியில் வீழ்த்த முடியாதவர்கள். அவர்கள் இந்த பவுலிங்குக்கு பழக்கமானவர்கள், அதனால்தான் அன்று நியூஸிலாந்து அணியினர் 348 ரன்களுக்கு ஸ்கோரை எடுத்துச் சென்றனர்” என்றார் வெங்சர்க்கார்.
2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சனிக்கிழமை கிறைஸ்ட் சர்ச்சில் ஹேக் ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.