இலங்கை அணி கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் குற்றம் சாட்டினர். முதலில் அதனை மறுத்து வந்தவர், பின்னர் பந்தை சேதப்படுத்தும் விடியோ காட்சிகளை காட்டியதும் தன்மீதுள்ள குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவரின் மேல் நடவடிக்கை எடுத்த ஐசிசி நிர்வாகம், சண்டிமாலுக்கு 2 சஸ்பென்ஷன் புள்ளிகளும், போட்டி ஊதியத்திலிருந்து 100 சதவீத அபராதமும் விதித்ததோடு, ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதித்தது. மேலும், ஜூலை 10 அன்று அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் ஜூலை 12 அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியலை இலங்கை கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் வெளியிட்டது.
இதில், ஐசிசி யால் விதிக்கப்பட்ட தடையை மீறி தினேஷ் சண்டிமாலையும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் கேப்டனாக மீண்டும் தினேஷ் சண்டிமல் இணைக்கப்பட்டு இருக்கிறார். சுரங்கா லக்மல், துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து பாதியில் விலகிய குறுகிய ஓவர் போட்டி கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ், காயத்தால் விலகிய குசல் பெரேரா, ரங்கனா ஹெராத் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
டெஸ்ட் தொடருக்கு முன், 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வாரியத் தலைவர் லெவன் அணியுடன், தென் ஆப்பிரிக்கா மோதுகிறது.
முன்னதாக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை விதிக்கப்பட்ட ஆஸி. வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னரையடுத்து, தற்போது தினேஷ் சண்டிமாலும் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் வார்கும் விதமாக, ஐசிசி யின் தடையை மீறியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
ஸ்மித்துக்கும் வார்னருக்கும் 1 ஆண்டு தான் தடை, சண்டிமாலின் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதையொட்டி, இவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் முனுமுனுத்து வருகின்றனர்.
இலங்கை டெஸ்ட் அணி: தினேஷ் சண்டிமல் (கேப்டன்), சுரங்கா லக்மல் (துணை கேப்டன்), ஏஞ்சலோ மேத்தியூஸ், திமுத் கருணரத்னே, குசல் மெண்டிஸ், தனுஸ்கா குணதிலகா, தனஞ்ஜய டி சில்வா, ரோஷன் சில்வா, நிரோஷான் டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா, அகில தனஞ்ஜய, லஹிரு குமரா, லக்ஷன் சண்டகன், கசுன் ரஜிதா, குசல் ஜனித்த பெரேரா, ரங்கனா ஹெராத்.