ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் இருந்தால் தான் அது சரியான சமநிலை பெற்ற அணியாக இருக்கும் என்று தினேஷ் கார்த்திக் பெருமிதமாக பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் துவங்குவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஆகையால் தலா 8 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டம் 8 ஓவர்கள் என்பதால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வைத்துக் கொண்டு நான்கு பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 2 ஓவர்களை வீசலாம். ஆஸ்திரேலியா அணி முதலிரவில் பேட்டிங் செய்து எட்டு ஓவர்களுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா அபாரமாக விளையாடினார். 20 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி விலாசி அணியின் வெற்றியை பெற்றிருந்தார் தினேஷ் கார்த்திக்.
வழக்கமாக ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக்கிற்கு முன்னே களமிறங்குவார். ஆனால் இந்த போட்டியில் எதற்காக தினேஷ் கார்த்திக் முன்னே களமிறங்கினார் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்திருந்தார்.
போட்டி முடித்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் அவரது உலக தரம் குறித்து தனது பேட்டியில் குறிப்பிட்டார். அதன் பிறகு ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டது குறித்தும் தனது பேட்டியில் பேசினார். இறுதியாக ஹர்திக் பாண்டியா அணியில் இருப்பது எத்தகைய பலத்தை கொடுக்கிறது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
தினேஷ் கார்த்திக் பேசுகையில், “ரோகித் சர்மா ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். வேகப்பந்துவீச்சை அவரைப் போன்று ஆடுவதற்கு வேறு எவரும் இல்லை.” என்றார்.
மேலும், “இன்றைய போட்டி 8 ஓவர்கள் என்பதால், நான்கு பந்துவீச்சாளர்கள் போதுமானது. ஒரு பவுலர் இரண்டு ஓவர்களை வீசலாம். அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா அணியில் இருப்பது ஐந்தாவது பந்துவீச்சு வாய்ப்பாக உள்ளது. இந்த இடத்தில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் நாம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்க்கு ரிஷப் சரியாக இருக்கும். ஹர்திக் பிளேயிங் லெவனில் இருப்பதால், அணி சமநிலை பெறுகிறது. பேட்டிங் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்தவர் ஹர்திக்.” என்று பேசினார்