14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், கொல்கத்தா அணி இதுவரை இரண்டு முறை ஐபிஎல்லில் கோப்பைகளை வென்றுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்காக 2012 மற்றும் 2014ல் கோப்பைகளை பெற்று தந்தார். கவுதம் கம்பீருக்கு பிறகு கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார்.
2018, 2019, 2020 ஆகிய மூன்று ஐபிஎல் சீசன்களில் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்தார். இவர் 2018ல் கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்தி பிளே ஆஃப்க்கு அழைத்து சென்றார். இவர் கொல்கத்தா அணியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மிகப் பெரிய காரணமாக இருந்திருக்கிறார்.
ஆனால் 2020 ஐபிஎல் சீசனில் தினேஷ் கார்த்திக் முதல் 7 போட்டிகளுக்கு தான் கேப்டனாக இருந்தார். அதன் பிறகு தனது கேப்டன் பொறுப்பை இயான் மோர்கனிடம் கொடுத்து விட்டார். அந்த 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். இவரது இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று புரியாமல் அனைவரும் இருந்தனர்.
இதுகுறித்து தற்போது தினேஷ் கார்த்திக் மௌனம் கலைத்திருக்கிறார். தினேஷ் கார்த்திக் பேசுகையில் “நான் இயான் மோர்கனுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். இது மிகவும் முக்கிய என்று நினைத்தேன். கடந்த ஐபிஎல்லில் நாங்கள் 7 போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டோம்.
அணியை பிளே ஆஃப்க்கு முன்னேற வைக்க அப்போது எங்கிளிடம் இன்னும் 7 போட்டிகள் மீதம் இருந்தது. நாம் மோசமான அணியை வழிநடத்துகிறோம் என்று அறிந்த பிறகும் மீண்டும் அதே தவறை செய்வது என்னை பொறுத்தவரையில் நியாயமற்றது” என்றார் தினேஷ் கார்த்திக்.
மேலும் பேசிய இவர் “2.5 வருடங்களாக நான் அணியை வழிநடத்தி இருக்கிறேன். அப்போது நான் வீரர்களிடம் என் மீது நம்பிக்கையை கண்டேன். இது தான் ஒரு தலைவனுக்கு வேண்டும். மோர்கனும் சிறப்பாக செயல்படக்கூடியவர் தான். மோர்கன் மற்றும் நானும் இணைந்து அணியை சிறப்பாக வழிநடத்த திட்டமிட்டே இந்த முடிவை எடுத்தேன்” என்றார். தினேஷ் கார்த்திக் தற்போது துணை கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.