இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சென்னையில் பயிற்சியை துவங்குகிறார்! ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் சென்னையில் பயிற்சியை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உலகெங்கிலும் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாத இறுதியில் இருந்து தற்போது வரை இரண்டு மாத காலத்திற்கும் மேலாக இந்தியாவில் எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் போட்டிகளும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன .மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சமூக பரவலை தடுக்க இந்தியாவில் இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், இந்திய வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பயிற்சிக்காக மைதானம் செல்லவும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
மே மாத இறுதியில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் செய்யப்பட்டதால், வீட்டின் அருகிலேயே இருக்கும் மைதானத்தில் மட்டும் வீரர்கள் பயிற்சி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. இருப்பினும், அதிகமான அளவில் கொரோனா பரவி வரும் இடங்களில் இருக்கும் வீரர்களுக்கு தற்போது வரை வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மற்ற இடங்களில் இருக்கும் வீரர்கள் மெதுவாக பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்த ஊரடங்கு காலத்தில் சொந்த ஊரான சென்னையில் இருந்து வருகிறார். சென்னையில் அதிக அளவிலான வைரஸ் பரவல் இருந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கெடுபிடி சற்று அதிகமாகவே காணப்பட்டது.
கடந்த ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு சென்னையிலும் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மீண்டும் பயிற்சியை தொடங்குவதற்காக தினேஷ் கார்த்திக் திட்டமிட்டு வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“60 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் மீண்டும் பயிற்சியை துவங்குவது எளிதல்ல. உடல்வாகும் முன்பு போல இருக்காது. இதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஆகும். முன்பை போல பயிற்சியை துவங்காமல் ஆரம்பத்தில் மெதுவாகத் துவங்கி, பின்னர் தீவிர பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளேன்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “சென்னையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பயிற்சியை துவங்குவதற்கு அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன். அனுமதி பெற்றவுடன் மைதானத்திற்கு சென்று மீண்டும் எனது பயிற்சியை துவங்க உள்ளேன். எனது உடல் முற்றிலுமாக மாறி இருக்கிறது. அதை விரைவில் சரி செய்ய வேண்டும்.” என்றார்.
தினேஷ் கார்த்திக் கடைசியாக ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணி சார்பில் பரோடா அணிக்கெதிராக ஆடி 49 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.