குல்தீப் யாதவ் ஆட்டத்தை மாற்றிவிட்டார் : தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரில் ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸ், ஹாட்ரிக் பவுண்டரி வீசினார். இதனால் 19 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் ராயல்ஸ். 
3-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் பட்லர் இரண்டு சிக்ஸ், 3 பவுண்டரி விளாசினார். இதனால் ராஜஸ்தானுக்கு 28 ரன்கள் கிடைத்தது. இதனால் 3 ஓவரில் 49 ரன்கள் குவித்தது. 3.2 ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்னைத் தொட்டது.
அதன்பின் கொல்கத்தா அணியினர் சிறப்பாக பந்துவீசினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 143 ரன்கள் வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. தொடர்ந்து கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ரன் குவித்தனர். முதல் ஓவரை கவுதம் வீசினார். அந்த ஓவரில் நரேன் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உட்பட 21 ரன்கள் எடுத்தார்.
2-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் நரேன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின் நிதிஷ் ராணா களமிறங்கினார். லைன், ராணா இருவரும் நிதானமாக விளையாடினர். இதனால் ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்தது.
9-வது ஓவரை இஷ் சோடி வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் நிதிஷ் ராணா எல்.பி.டபுல்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்திருந்தது.
15 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. 16-வது ஓவரை ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் லைன் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். அதன்பின் ஆண்ட்ரே ரசல் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக், ரசல் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் விளையாடினர்.
இறுதியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். அவர் 41 ரன்களுடன் களத்தில் இருந்தார். ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Editor:

This website uses cookies.