சவுத்தாம்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின், முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர் சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்திய அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்று 2-1 என்றகணக்கில் இருந்தன. இந்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டன் நகரில் நடந்தது.
இதில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 245 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்துஅணி 3-வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2011, 2014ம் ஆண்டுகளில் இங்கிலாந்து வந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்திருந்த நிலையில், இந்த முறை கோலி தலைமையில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,தொடரை இழந்துள்ளது.
இந்த தொடரில் விராட் கோலி, சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே ஆகிய 3 வீரர்களைத் தவிர எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேட் செய்யவில்லை. பந்துவீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்திய அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் தற்போது முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை சாடியுள்ளார்.
இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு புறப்படும் முன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகிலேயே எந்த நாட்டுக்குச் சென்றாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடக் கூடிய அணியாக இந்திய அணி திகழ்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதைக் குறிப்பிட்டு வீரேந்திர சேவாக் சாடியுள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
‘‘உலக அளவில் வெளிநாடுகளில் சென்று சிறப்பாக விளையாடக்கூடிய அணி இந்திய அணி என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேச்சில் மட்டும்தான் கூறுகிறார். ஆனால், பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை.
வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படும் அணிகளின் திறமை களத்தில்தான் வெளிப்படுகின்றன. ஓய்வறையில் அமர்ந்து கொண்டு பேசுவதால் உருவாக்கப்படுவதில்லை, வீண் பெருமையடிப்பதாலும் வருவதில்லை.
ஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம், ஆனால், வீரர்களின் பந்துவீச்சும், பேட்டிங்கும் பேச வேண்டும் இல்லாவிட்டால், ஒருபோதும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் அணி என்று பெயர் எடுக்க முடியாது. ஆதலால், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சைக் குறைத்து, செயலில் காட்ட வேண்டும்.
இந்தத் தொடரில் இந்திய அணி முத்திரை பதிக்க ஏராளமான தங்க வாய்ப்புகள் கிடைத்தன. முதல் டெஸ்டில் வெற்றி பெறும் தருவாயில் 31 ரன்களில் தோல்வி அடைந்தோம், 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்களில் வெற்றியை இழந்தோம’’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி லண்டனில் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வதன் மூலம் இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது என்ற வார்த்தையில் இருந்து தப்பிக்க முடியும்