2வது டெஸ்டில் இந்தியா ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் வினோதமாக இருக்கிறது என சுட்டிக்காட்டினார் தினேஷ் கார்த்திக்.
பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்கள் மிச்சல் ஸ்டார்க், ஹேசல்வுட், கேமரூன் கிரீன் ஆகியோர் காயம் காரணமாக தொடர்ந்து வெளியில் இருக்கின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர்கள் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் காயம் முழுமையாக குணமடையவில்லை என்பதால் ஆடவில்லை.
ஸ்பின்னர் ஆஸ்டன் அவர் விளையாட வைக்கப்படுவார் என எதிர்பார்ப்பும் நிலவியது. ஆனால் மற்றொரு சுழல் பந்துவீச்சாளரை களமிறக்கியுள்ளனர். நெதன் லயன், டாட் மர்பி, மற்றும் புதிய சுழல் பந்துவீச்சாளர் உட்பட 3 சுழல் பந்துவீச்சாளர்களுடனும் ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் இடத்தில் பேட் கமெண்ட்ஸ் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
அதே நேரம் இந்திய அணி இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை விட ஒரு வேகப்பந்துவீச்சாளர் கூடுதலாக இந்திய அணி களமிறங்குகிறது. இதற்கு முன்னர் இதுபோன்று நடந்தது இல்லை. இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று தனது கமெண்டரியில் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 15 ரன்களுக்கும், லபுஜானே 18 ரன்களுக்கும், ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். நன்றாக விளையாடிய உஸ்மான் கவாஜா 81 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
தற்போது களத்தில் நிலைத்து நின்று ஆடிவரும் ஹேன்ஸ்கோம் அரைசதம் கடந்து 51 ரன்கள் அடித்திருக்கிறார். மறுமுனையில் கம்மின்ஸ் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து வருகிறார். இவர் 30 ரன்களுக்கு களத்தில் இருக்கிறார். தேநீர் இடைவேளை முடிந்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்து இருக்கிறது.