ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வருவதற்கு சரியாக இருப்பார் என்று ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, இந்திய அணியின் செயல்பாட்டில் தடுமாற்றம் கண்டு வருகிறது. தென்னாபிரிக்கா அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரின்போது கேஎல் ராகுல் தற்காலிக கேப்டன் பொறுப்பு வகித்தார் ரோகித்சர்மா வந்து விட்டால், அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு விடும்.
ஐபிஎல் போட்டிகளில் இரண்டு வருடங்கள் கேப்டன் பொறுப்பு வகித்த பிறகு, இந்திய அணியில் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுலுக்கு இன்னும் கேப்டன் பொறுப்பில் போதிய அனுபவம் இல்லை என தெளிவாக காட்டுகிறது. அவருக்கு போதிய கேப்டன் பொறுப்பு வகிக்கும் திறனும் குறைவாக இருக்கிறது என்றே படுகிறது. ஏனெனில் அதற்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் அவர் கேப்டன் பொறுப்பை வகித்தே இல்லை என்று பலரும் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.
இந்நிலையில் பும்ராவை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வளர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
“ராகுல் அனுபவம் மிக்க வீரராக தெரிந்தார். ஆனால் அவரது கேப்டன் பொறுப்பு போதிய அளவில் இல்லை. ரோகித் சர்மாவும் அடிக்கடி காயம் காரணமாக வெளியேறிவிடுகிறார். ரோகித் சர்மா வந்துவிட்டால் துணை கேப்டன் பொறுப்பு பும்ராவிற்கு கொடுக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் இருக்கின்றன. ரோகித் சர்மா 2 வருடங்கள் குறைந்தபட்சம் கேப்டன் பொறுப்பில் இருப்பார். அதற்குள் பும்ராஹ் நிறைய அனுபவங்களை பெற்று விடுவார். அவரிடம் ஆக்ரோஷமும் இருக்கிறது. இது அணியின் எதிர்காலத்திற்கு சாதகமாக இருக்கும். ஆகையால் அடுத்த கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் அவரை வளர்த்துவிடுவது சரியான முடிவாக இருக்கும்.
விராட் கோலி போன்ற வீரர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினால், எத்தகைய தடுமாற்றத்தை ஒரு அணி சந்திக்க நேரிடும் என தெளிவாக தெரிந்துவிட்டது. மீண்டும் அதே தவறை பிசிசிஐ செய்துவிடக்கூடாது. ஆகையால் இளம் வீரர்களை விரைவாக கேப்டன் பொறுப்பிற்கு கொண்டுவந்து திறமைகளை வளர்த்து விட வேண்டும்.” என்றார்.
மேலும் பேசிய அவர் அதற்கு அடுத்ததாக ரிஷப் பண்ட் சரியான வீரராக தெரிகிறார். மேலும் ஒரு கீப்பரை கேப்டன் பொறுப்பில் அமர்த்தினால் எந்த அளவிற்கு சாதகமாக இருக்கும் என்றும் உலக கிரிக்கெட் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.” என்றார்.