‘களத்துல சந்திப்போம்’ ரபடாவிற்கு செம்ம ரிப்லை கொடுத்த இந்திய கேப்டன் விராட் கோலி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் அசத்தும்பட்சத்தில் தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. பங்கேற்கும் 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் அனைத்த அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். மற்ற அணிகள் எல்லாம் தலா 2 போட்டிகளில் பங்கேற்று விட்ட நிலையில் போதுமான ஓய்வுக்குப் பின் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று களமிறங்குகிறது.

சவுத்தாம்ப்டனின் ரோஸ் பவுல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் தோற்ற பிறகு, 2019 உலக கோப்பை தொடருக்கான அணியை அப்போதிருந்தே தயார் செய்தது இந்தியா.

ஆனால் 2011 அணியில் தோனிக்கு இருந்த சச்சின், சேவக், யுவராஜ் சிங், காம்பிர் போன்ற ‘மேட்ச் வின்னர்கள்’ தற்போது இல்லை. முனாப் படேல், நெஹ்ரா, ரெய்னா என பலரும் அவ்வப்போது கைகொடுத்தனர்.

இம்முறை கோஹ்லி தலைமையில், தோனி ஆலோசனையில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் 9 போட்டிகளில் 6ல் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம். ‘நம்பர்–1’ பேட்ஸ்மேனாக ஆதிக்கம் செலுத்தும் கோஹ்லி, கபில்தேவ் (1983), தோனிக்கு (2011) கோப்பை வென்று சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் கொடுக்க வேண்டும். ‘சுழலில்’ ரோகித் தடுமாறும் விஷயம் தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசிக்கு தெரியும் என்பதால், இம்ரான் தாகிர் முதல் ஓவரை வீசலாம். இதை சமாளித்து ரோகித் ஜொலிக்க வேண்டும். 4வது இடத்தில் லோகேஷ் ராகுல், 5வதாக ‘சீனியர்’ தோனி வரவுள்ளனர்.

பின் வரிசையில் காயத்தில் இருந்து மீண்ட கேதர் ஜாதவ் களமிறங்கலாம் எனத் தெரிகிறது. ‘ஆல்– ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, 2011ல் யுவராஜ் சிங் சாதித்ததை போல அசத்தினால் வெற்றி எளிதாகும்.

என்னை விமர்சித்த ரபடாவுடன் நேருக்கு நேர் விவாதிப்பேன்’- கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தோம். அந்த தோல்வியில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை விட இப்போது வலுவான அணியாக உள்ளோம்.

இந்த உலக கோப்பையில் சில ஆட்டங்கள் ஒரு தரப்பாக அமைந்துள்ளன. களத்தில் பொறுமையாக செயல்படுவது குறித்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பதற்றமின்றி நிதானமாக செயல்படும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா என்னை முதிர்ச்சியற்ற வீரர் என்று விமர்சித்தது குறித்து கேள்வி கேட்கிறீர்கள். அவருக்கு நான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் பதில் அளிக்க விரும்பவில்லை. அவருக்கு எதிராக நான் பல ஆட்டங்களில் விளையாடி இருக்கிறேன். இந்த விஷயத்தில் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதை தனிப்பட்ட முறையில் செய்வேன். அவர் உலகத் தரம் வாய்ந்த ஒரு பவுலர். அவருக்குரிய நாளாக அமைந்து விட்டால் எந்த பேட்டிங் வரிசையையும் சீர்குலைத்து அச்சுறுத்தலாக விளங்குவார். எனவே எந்த வகையிலும் அவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

ஸ்டெயினுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் எனது நீண்ட கால நண்பர். அணிக்கு மீண்டும் திரும்பிய போது மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு கோலி கூறினார்.

Sathish Kumar:

This website uses cookies.