இப்ப தான் டீமுக்கே வந்திருக்காங்க அதுக்குள்ள ஏன்..? கொஞ்சம் நிம்மதியா விளையாட விடுங்க; ஜெய்ஸ்வால், திலக் வர்மா குறித்து பேசிய வாசிம் ஜாபர்
யசஸ்வி ஜெய்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோரை பகுதிநேர பந்துவீச்சாளர்களாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக பேசியிருந்த இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரின் கருத்திற்கு முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை மிக இலகுவாக கைப்பற்றிய இந்திய அணியால், டி.20 தொடரில் விண்டீஸ் அணியை இந்திய அணியால் இலகுவாக சமாளிக்கவே முடியாவில்லை.
விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் மோசமான தோல்விகளை சந்தித்த இந்திய அணி, அதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது டி.20 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ஐந்தாவது டி.20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து, டி.20 தொடரையும் இழந்தது.
விண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 தொடரை இந்திய அணி இழந்திருந்தாலும், இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்கு திலக் வர்மா என்ற புதிய நம்பிக்கை நாயகன் கிடைத்துள்ளது ஒரு நல்ல விசயமாக பார்க்கப்படுகிறது. அதே போல் ஜெய்ஸ்வாலும் இந்த தொடரின் மூலம் இந்திய அணியில் கால் பதித்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
திலக் வர்மா மற்றும் ஜெய்ஸ்வாலை இந்திய அணியின் எதிர்காலமாக பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வரும் நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோரை பகுதி நேர பந்துவீச்சாளர்களாகவும் பயன்படுத்தி கொள்ளும் திட்டமும் இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பேசியிருந்தார்.
இந்தநிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மாவை பந்துவீச்சிலும் பயன்படுத்தி கொள்ள இருக்கும் இந்திய அணியின் திட்டத்தை முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் எதிர்த்து பேசியுள்ளார்.
இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “சர்வதேச போட்டிகளில் பந்துவீசும் அளவிற்கு ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இன்னும் தயாராகவில்லை என்றே நான் கருதுகிறேன். திலக் வர்மா கூட ஒரிரு போட்டிகளில் பந்துவீசி பார்த்துள்ளோம், ஆனால் ஜெய்ஸ்வால்..? நிச்சயமாக இந்திய அணி இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். அவர்கள் இருவரையும் முதலில் முழுமையாக தயார்படுத்த வேண்டும். வலைபயிற்சியில் இருந்தே அவர்களை பந்துவீசுவதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், சேவாக் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் பந்துவீசியுள்ளனர், இதனால் இந்திய அணியின் இந்த முயற்சியை தவறு என சொல்ல முடியாது, ஆனால் அவர்களை அதற்காக முதலில் தயார்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து. இந்த விசயத்தில் அவசரப்படுவதால் எந்த பயனும் இல்லை” என்று தெரிவித்தார்.