ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று ஆப்கான் அணிக்கு எதிராக சற்றும் எதிர்பாரா விதமாக தோனியிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டது. இது கேப்டனாக அவரது 200வது போட்டியாகும். இது தோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்க ஆப்கன் அணியோ ஆட்டத்தை டை செய்து இந்திய ரசிகர்களுக்கே அதிர்ச்சியளித்தது.
கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கத் திராணியில்லாமல் ஜடேஜா ஆட்டமிழக்க ஆப்கான் அணி ஒரு அபார டை போட்டியில் வரலாற்றில் இடம்பெற்றது. ஆப்கான் அணியை தோனி மனம்திறந்து பாராட்டினார்.
தோனி, தினேஷ் கார்த்திக்கு எல்.பி.தீர்ப்பு அபத்தமாக அமைந்தது, இரண்டுமே லெக் திசையில் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளாகும், ரிவியூ இல்லை. என்ன செய்வது, பொதுவாக ரிவியூவை நம்பாதவர் தோனி. நடுவர் தீர்ப்புத்தான் இறுதி என்று நம்புபவர், நடுவரின் இரண்டு தவறான தீர்ப்புகளை பரிசளிப்பு நிகழ்ச்சியிலேயே கூறிவிடும் அளவுக்கு ‘கூல்’ தன்மையை இழந்து விட்டாரா என்று தெரியவில்லை.
இந்த ஆட்டம் குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மைக்கைப் பிடித்த தோனி கூறியதாவது:
ஆப்கன் அணியின் கிரிக்கெட் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தத் தொடரில் முதலிலிருந்தே அவர்கள் ஆடிய ஆட்டத்தைப் பார்க்கும் போது மதிக்கத்தக்கதாக உள்ளது. இந்த ஒரே அணிதான் தகுதியுடன் வரிசைப்படி முன்னேற்றம் கண்டுள்ளது.
நன்றாகப் பேட் செய்தார்கள், அவர்கள் எப்படி பீல்ட் செய்தார்கள், பவுல் செய்தார்கள் என்பது மிகப்பிரமாதம்.
நாங்கள் தவறாக ஆடினோம் என்று கூறவரவில்லை. முக்கிய வீர்ர்களுக்கு ஓய்வு அளித்து விட்டோம் இது கொஞ்சம் ஆட்டம் தொடங்கும் முன்பே குறைபாடாக அமைந்தது. ஃபுல் லெந்தில் ஸ்விங் ஆகாத போது வேகப்பந்து வீச்சாளர்கள் பேக் ஆஃப் லெந்த்துக்கு மாறியிருக்க வேண்டும் என்பது முக்கியம். இதில்தான் 5-6 ஓவர்களை விட்டுவிட்டோம்.
அதே போல் பேட்டிங்கில் ஷாட் தேர்விலும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். இரண்டு ரன் அவுட்கள் வேறு. மேலும் 2 பிற விஷயங்கள் உள்ளன, அதைப்பற்றி பேசி நான் அபராதம் விதிக்கப்பட விரும்பவில்லை.
நாம் தோற்காமல் போட்டி டை ஆனது மோசமானாது என்று கூற முடியாது.
இவ்வாறு கூறினார். தோனி. இரண்டு விஷயங்களைக் கூறி அபராதம் கட்ட விரும்பவில்லை என்று கூறியது தனக்கும், கார்த்திக்கிற்கும் தவறாக நடுவர் எல்.பி.தீர்ப்பு வழங்கியதைத்தான் என்று தெரிகிறது.