ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எடுக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின்-ஐ கிண்டலாக வரவேற்று இருக்கிறார் ஜோஸ் பட்லர்.
பெங்களூருவில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 வீரர்கள் பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக இஷன் கிஷன் 15.25 கோடிக்கும், தீபக் சஹர் 14 கோடிக்கும் எடுக்கப்பட்டது அதிகபட்சமாக இருக்கிறது. இன்னும் சில வீரர்கள் பத்து கோடிக்கு மேல் சென்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
சென்னை, மும்பை போன்ற அணிகள் எந்த வித ஆர்ப்பரிப்பும் இன்றி தங்களுக்கு தேவைப்பட்ட வீரர்களை நிதானமாக ஏலம் எடுத்தனர். லக்னோ, குஜராத் அணிகள் புதிதாக இணைந்திருப்பதால் முன்னணி வீரர்கள் பலரை போட்டி போட்டுக்கொண்டு தங்களது அணிக்காக எடுத்தனர்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்துவரும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஏலத்திற்கு முன்பாக, சென்னை அணியால் எடுக்கப்பட்டால் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். அவரை எடுக்க டெல்லி, சென்னை போன்ற அணிகள் துவக்கத்தில் போராடின. பிறகு மூன்று கோடிக்கும் மேல் சென்றதால் சென்னை அணி கைவிட்டது.
டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் போராடினாலும் இறுதியில் ராஜஸ்தான் அணி அவரை 5 கோடி ரூபாய்க்கு எடுத்தது. ‘மிகவும் அனுபவம் மிக்க வீரர். இதற்கு முன்னர் கேப்டனாக இருந்த அனுபவம் பெற்றிருக்கிறார். இவரை அணியில் வைத்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கும்.’ என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் தலைவர் குமார் சங்கக்கார தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் பஞ்சாப் அணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஜோஸ் பட்லர் மற்றும் அஸ்வின் இருவருக்குமிடையே களத்தில் நடந்த மேன்கேட் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக அஸ்வின் செய்த இந்த சம்பவத்தை நினைவுக்கூறி, ஜோஸ் பட்லர் கிண்டலடிக்கும் விதமாக அஸ்வினை வரவேற்று ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
“ஹலோ அஸ்வின் நான் கிரீஸ் உள்ளே இருக்கிறேன். கவலை வேண்டாம். விரைவில் பிங்க் நிற உடையில் உன்னை காண ஆர்வமாக இருக்கிறேன். வெல்கம் டு ராஜஸ்தான் ராயல்ஸ்.” என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவு நகைப்பூட்டியது மட்டுமல்லாமல், பெரும் வரவேற்பையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.