ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த டுவைன் பிராவோ ; புதிய பதவியை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி …
ஐபிஎல் தொடரிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ, 2011 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியை விளையாடினார். பின் அதே ஆண்டு டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ராவோ, அன்றிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார்.
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியை, பல இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றிய டுவைன் பிராவோ, சென்னை அணி கோப்பையை கைப்பற்றுவதற்கும் உதவியாக இருந்துள்ளார்.குறிப்பாக 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றிய பொழுது சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை பிராவோ வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால் காலம் செல்ல செல்ல ஒரு அணி ஒரு வீரரை அப்படியே வைத்திருக்காது என்ற எழுதப்படாத சட்டத்தின் அடிப்படையில் சென்னை அணி, 2023 ஐபிஎல் தொடரிலிருந்து பிராவோவை கழட்டிவிட்டது. இருந்த போதும் சென்னை அணி பிராவோவை ஒருபோதும் கைவிடாது என்று கிரிக்கெட் விமர்சகர்களும் மற்றும் சென்னை அணியின் நிர்வாகிகளும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தன்னுடைய காலம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த பிராவோ ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலுமிருந்து ஓய்வை அறிவித்துவிட்டு, இனிவரும் காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங்க் பயிற்சியாளராக வளம் வரவுள்ளதாக பிராவோ தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய ஓய்வு குறித்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்தும் பிராவோ தெரிவித்திருந்ததாவது,“என்னுடைய விளையாட்டுக்காலம் முடிவடைந்து விட்டதாக நான் கருதுகிறேன். மேலும் பயிற்சியாளராக என்னுடைய பாதையை காண்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன், ஒரு பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், ஒரு வீரராக திகழ்ந்து பின் பயிற்சியாளராக மாறியுள்ளதை நினைத்து கொஞ்சம் தயக்கமாக உள்ளது, அதற்கு ஏற்றார் போல் என்னால் தயாராகிக் கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் ஒரு பந்துவீச்சாளராக செயல்பட்ட பொழுது பல யோசனைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு கடினமாக உழைப்பேன், மேலும் எதிரணி பேட்ஸ்மேன் சிந்திப்பதை விட ஒரு படி மேல் சிந்தித்து அவருடைய விக்கெட்டை வீழ்த்துவதற்கு முயற்சி செய்வேன்.
ஆனால் ஒரு பயிற்சியாளராக களத்தில் இல்லாமல் களத்திற்கு வெளியிலிருந்து இதை செய்ய வேண்டும், மேலும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் இடம்பெற்றுள்ளது எனக்கே ஆச்சரியம் அளிக்கிறது, இந்த சாதனையை நான் செய்வேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை, ஆனால் ஐபிஎல் வரலாற்றில் நானும் பங்களித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது” என பிராவோ தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் 161 போட்டிகளில் பங்கேற்ற டுவைன் பிராவோ 183 வீழ்த்தி அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.