2023 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே லெஜெண்ட் பிராவோ கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
2023 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக நடைபெறும் சிறிய அளவிலான ஏலம் வருகிற டிசம்பர் கடைசி வாரம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக 900க்கும் அதிகமானோர் பதிவு செய்திருக்கின்றனர். அதில் 30 இருக்கும் மேற்பட்டோர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்திருக்கிறது.
நவம்பர் 15 ஆம் தேதி அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பா, டிவைன் பிராவோ உட்பட எட்டு வீரர்களை வெளியேற்றியது. இதில் பிராவோ வெளியேற்றப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஏனெனில் இன்னும் அவர் முழு உடல் தகுதியுடன் தான் விளையாடி வருகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நல்ல பங்களிப்பையும் கொடுத்து வருகிறார்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் 4.4 கோடி ரூபாய் கொடுத்து அவரை சிஎஸ்கே அணி எடுத்தது. இது அவருக்கு அதிகம் என நினைத்து வெளியேற்றிவிட்டு ஏலத்தில் மீண்டும் எடுத்துக் கொள்வார்கள் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் தற்போது வெளிவந்த தகவலின் படி, பிராவோ 2023 ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிய வந்திருக்கிறது. இது இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
பிராவோ பங்கேற்காததற்கு என்ன காரணமென்று தற்போது வரை தெரியவில்லை. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட காலம் பயணித்த பொல்லார்ட், மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்படுவதாக இருந்தார்.
வேறு எந்த அணிக்கும் எனக்கு விளையாட விருப்பமில்லை என தெரிவித்து ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பேட்டிங் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்தது.
அதேபோல் பிராவோ ஓய்வு முடிவை அறிவிப்பாரோ? என சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஐபிஎல் துவங்க இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நமக்கு நிச்சயம் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.