கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 23,500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். எனினும் தி ஹண்ட்ரெட் போட்டியை ஒத்திவைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஐபிஎல் 2020 தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாகவும், நிகழாண்டு போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போட்டிகள் ஒத்திவைப்பால் பிசிசிஐ அமைப்புக்கு மொத்தம் ரூ.3,300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.3269 கோடி ஒளிபரப்பு உரிமை,
மற்றும் ஸ்பான்சா்ஷிப், விளம்பர வருவாய் போன்றவை அடங்கும். மேலும் போட்டிகள் நடைபெறும் மாநில சங்கங்களுக்கும் பாா்வையாளா் டிக்கெட் கட்டணம் கிடைக்காது என்பதால் மொத்தம் ரூ.250 கோடி வரை வருவாயை இழக்கும்.
கடந்த 2017-இல் ஐபிஎல்லின் உலகளாவிய டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை 5 ஆண்டுகளுக்கு என மொத்தம் ரூ.16,300 கோடிக்கு பெற்றது ஸ்டாா் இந்தியா. மேலும் விவோ நிறுவனத்துக்கு போட்டி ஸ்பான்சா் உரிமையும் ரூ.2000 கோடியையும் பிசிசிஐ விற்றுள்ளது. நிகழாண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாத நிலையில், ரூ.400 கோடி வரை அதிலும் இழப்பு ஏற்படும்.
மேலும் வீரா்களின் ஹெல்மெட்டில் விளம்பரம் செய்ய ரூ.1 கோடி, உடை முன்பக்கம் விளம்பரத்துக்கு ரூ.5 கோடி, தோள்பட்டையில் விளம்பரம் செய்ய ரூ.2.5 கோடியும் வருவாயாக கிடைக்கும். இவற்றையும் பிசிசிஐ இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.