இந்தியா – வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் இந்தியா எதிா்கொள்ளவிருக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாகும். இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்து இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.
*“இந்த ஆடுகளத்தில் (பிட்ச்) வழக்கமாக 4 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் விடுவோம், ஆனால் இது பகல்-இரவு போட்டி என்பதால் 6 மில்லிமீட்டர் அளவுக்கு புற்கள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறோம். இது பிங்க் பந்தின் பளபளப்பை நீண்ட நேரம் தக்க வைக்க உதவும்” என்று கொல்கத்தா ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜி கூறியுள்ளார். இந்தூர் ஆடுகளத்தை ஒப்பிடும் போது இது உயிரோட்டமாக இருக்கும். பந்து நன்கு பவுன்ஸ் ஆகும் என்றும் குறிப்பிட்டார்.
* இந்த போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குளிர் காலம் என்பதால் கொல்கத்தாவில் மாலை 4 மணிக்கெல்லாம் சூரியன் மறையத் தொடங்கி விடுகிறது. அதனால் இந்த டெஸ்டின் கடைசி கட்ட பகுதியில் (தேனீர் இடைவேளைக்கு பிறகு) பனிப்பொழிவு பிரச்சினை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பனி அதிகமாக பொழிந்தால் பந்தை பிடித்து வீசுவதில் ‘கிரிப்’ கிடைக்காமல் பவுலர்கள் தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். இதனால் பனியின் தாக்கத்தை முடிந்தவரை குறைக்க ‘ஸ்பிரே’ அடிக்கப்படும்.
* பகல் நேர டெஸ்ட் போட்டியில் உபயோகப்படுத்தப்படும் சிவப்பு நிற பந்தை இரவில் தெளிவாக பார்ப்பதில் சிரமம் இருக்கிறது. அதனால் தான் பகல்-இரவு டெஸ்டுக்கு பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு மற்றும் பிங்க் பந்துக்கு இடையே ஒரே ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் பிங்க் பந்து கருப்பு நூலால் பிணைக்கப்பட்டிருக்கும்.