இங்கிலாந்து நாட்டில் சுற்று பயணம் செய்து வரும் இந்திய அணி 3 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த சர்வதேச டி20 கிரிக்கெட் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 18.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்தது.
இந்த நிலையில், போட்டியில் விளையாடியது பற்றி இந்திய அணியின் வீரர் குல்தீப் யாதவ் கூறும்பொழுது, கிரிக்கெட் பயிற்சியின்பொழுது, பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் அடிக்கும் வகையில் பந்து வீச பயிற்சியாளர் கபில் பாண்டே எனக்கு பயிற்சி வழங்கினார்.
உண்மையான போட்டி ஒன்றில் சிக்சர்கள் எப்படி அடிக்கப்படுகிறது என்பது பற்றி புரிந்து கொள்ளும் வகையில் அதற்கேற்ப பந்து வீசும்படியான பயிற்சியை நான் மேற்கொண்டேன்.
நீங்கள் விக்கெட்டுகள் எடுக்க விரும்பினால், பந்தினை சுழல செய்ய வேண்டும். பந்து சுழலவில்லை எனில் அவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கிடையாது என கூறினார்.
பேட்டிங் செய்பவர் யார் என்று தெரிந்து விட்டு நான் பந்து வீசுவது கிடையாது. என்னால் என்ன செய்ய முடியும் என்பதனையே நான் எப்பொழுதும் முயற்சிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த போட்டியில் குல்தீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது டி20 போட்டியில் மிக அரிய ஒன்று. இந்திய பந்து வீச்சாளர்களில் சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு அடுத்து இந்த பெருமையை பெற்றுள்ள 3வது பந்து வீச்சாளர் குல்தீப் ஆவார்.
இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தானின் உமர் குல்லுக்கு அடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.