இவர்கள் யார் என்பதை மறந்துவிடாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா ஆதரவு
அனைத்து சூழ்நிலைகளிலும் இந்திய அணிக்கு ஆதரவாக இருப்பது நமது கடமை என்று இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து – இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். புஜாரா ஒரு ரன்னில் அவுட்டானார். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது.
அதன்பின் இறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
உலக நம்பர் 1 அணியாக திகழ்ந்து வரும் இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “இதே வீரர்கள் தான் இந்திய அணியை நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இது நமது அணி, இம்மாதிரியான கடின சூழ்நிலைகளில் நாம் தான் நமது அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.