இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு சாம் கரன், மொயின் அலி ஜோடி நங்கூரமிட்டு சரிவிலிருந்து இங்கிலாந்து அணியை மீட்டனர்.
முதல் 6 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் இவர்கள் இருவரையும் பிரிக்க மிகுந்த சிரமப்பட்டனர். 7-வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் மொயின் அலி(40) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தபோதிலும்,சாம் கரன் அதிரடியாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சாம் கரனை மட்டும் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக ஆட்டமிழக்கச் செய்திருந்தால், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்களுக்குள் முடிந்திருக்கும்.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசிய போதிலும், 40 ஓவர்களுக்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்த மிகுந்த சிரமப்பட்டனர். பந்துவீச்சில் ஒருவிதமான தேக்கநிலை காணப்பட்டது.
ஒரு டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு செஷனிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். என்னைப் பொருத்தவரை இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாகவே, துல்லியமாகவே பந்துவீசினார்கள்.
அதற்கு ஏற்றார்போல் இங்கிலாந்து வீரர்களும் நன்றாக பேட் செய்தனர் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக சாம் கரன் மற்றும் மொயின் அலி அமைத்த கூட்டணிதான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கரன் தொடக்கத்தில் இருந்து, மிகவும் பொறுமையாக பேட் செய்தார்.
அதிலும் பந்து தேய்ந்தபின், ஸ்விங் ஆவது குறைந்துவிட்டது, அதிகமாகவும் பந்து திரும்பவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் சில ஷாட்களை அடித்து, ரன் வேகத்தைகூட்டி ஸ்கோரை உயர்த்திக்கொண்டனர்.
மாலை நேர தேநீர் இடைவேளைக்கு பின்புதான், நாங்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து, கடினமாக உழைத்தோம். அதன்பின்தான் விக்கெட்டுகள் வீழ்ந்தன. முதல்நாளில் இந்திய அணியின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முதல் நாளிலேயே எதிரணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டிவிட்டோம்.
80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, நாங்கள் 150 ரன்களுக்குள் சுருட்டிவிடுவோம் என்றுதான் நம்பியிருந்தோம் ஆனால், கரன், மொயின் ஜோடி நிலைத்து ஆடிவிட்டனர்.
எப்போதும் எதற்கும் பேராசைப்படக்கூடாது, அதிகமாகவும் எதிர்பார்க்கக் கூடாது. 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுபோது, 100 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்று எப்படி நம்ப முடியும். 7-வது விக்கெட்டுகளுக்கு இங்கிலாந்து நிலைத்து ஆடியதுதான் ரன் குவிக்க காரணமாக இருந்தது.
நாங்கள் முதலில் பந்துவீச முடிவு செய்தபோது, பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின, எழும்பின. இதனால், விக்கெட்டுகளை வீழ்த்துவது எளிதாக இருந்தது. ஒருவேளை நாங்கள் முதலில் பேட் செய்திருந்தால், இன்னும் அதிகமாக இங்கிலாந்து வீரர்களுக்குப் பந்துகள் ஸ்விங் ஆகி இருந்திருக்கலாம்.
என்னைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் லைன் அன்ட் லென்த்தில் பந்து வீசியதுதான் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. எதிரணிக்கு நெருக்கடி அளித்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது.