தனது காயத்தின் நிலை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார் விராட் கோஹ்லி
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதலில் தடுமாறினாலும் வோக்ஸ், பெர்ஸ்டோவ் அபார ஆட்டத்தால் 396 ரன்கள் குவித்தது. வோக்ஸ் 137 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து, 289 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முரளி விஜய் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். முரளி விஜயை தொடர்ந்து கே.எல்.ராகுலும் 10 ரன் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 17 ரன்னிற்கு 2 விக்கெட்களை இழந்தது.
இந்தத் தொடரில் 4வது விக்கெட்டுக்கு இதுவரை விராட் கோலி தான் களமிறங்கி வந்தார். ஆனால், இந்த இன்னிங்சில் கோலிக்கு பதிலாக ரகானே களமிறங்கினார். இதற்கு காரணம், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடிய போது களத்தில் கோலி 37 நிமிடங்கள் இல்லை. அதனால், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் 37 நிமிடங்களுக்கு பிறகு தான் களமிறங்க முடியும். ஒரு வேளை அதற்குள் விக்கெட்கள் விழாமல் இருந்திருந்தால், விராட் கோலி வழக்கம் போல் 4வது வீரராகவே களமிறங்கி இருப்பார். ஆனால், முரளி விஜய், கே.எல்.ராகுல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால், ரகானே முன்னதாக களமிறங்கப்பட்டார். இந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட முதுகு வலி பிரச்சனை தன்னை மீண்டும் துண்புறுத்தி வருவதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய விராட் கோஹ்லி, இந்த போட்டி மிகவும் மோசமானது, இந்த நாள் எங்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. முதுகு வலி என்னை மீண்டும் துண்புறுத்தி வருகிறது. அடுத்த ஐந்து அல்லது ஆறு தினங்களுக்குள் முழுமையாக குணமடைவேன் என்று நினைக்கிறேன்.தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்போம்” என்றார்.