கோஹ்லி ஆலோசனைகள் சிறப்பாக விளையாட உதவியது; ஹனுமா விஹாரி சொல்கிறார்
இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு விராட் கோஹ்லியின் ஆலோசனைகள் பெரிதும் கைகொடுத்ததாக இளம் வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள ந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்டின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என தொடரை கைப்பற்றி சாதித்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடக்கிறது. இப்போட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குக் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாகும்.
இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து, 158 ரன்கள் பின் தங்கியுள்ளது. விஹாரி (25), ரவிந்திர ஜடேஜா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, அறிமுக வீரர் விஹாரி (56) அரைசதம் அடித்து கைகொடுத்தார். இதன் மூலம் அறிமுக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 26வது இந்தியர் என்ற பெருமை பெற்றார் விஹாரி. இதனையடுத்து அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த ஹனுமா விஹாரிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடுவதற்கு இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் ஆலோசனைகள் கைகொடுத்ததாக ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹனுமா விஹாரி கூறியதாவது, “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் மைதானத்திற்குள் பெரும் பதற்றத்துடனே கால் வைத்தேன். மேக மூட்டத்திற்கு நடுவே ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற ஜாம்பவான்களின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்று நினைத்து கொண்டே தான் களத்திற்கு வந்தேன். ஆனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய உடன் எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த துவங்கிவிட்டேன், பேட்டிங் செய்ய களமிறங்கிவிட்டால் எப்பொழுதும் வேறு எதை பற்றியும் யோசிக்க மாட்டேன். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட விராட் கோஹ்லி போன்ற சீனியர் வீரர்கள் கொடுத்த ஆலோசனைகளும், எனது நிர்வாகம் கொடுத்த ஆலோசனைகளும் பெரிதும் கைகொடுத்தன” என்றார்.